சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2, வாடிவாசல் படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
விடுதலை இரண்டாம் பாகம் வெளியானதும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ரெடியாக காத்திருக்கிறார்களாம்.
ஆனால், அவர்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் இன்னும் ஓக்கே சொல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் கமல், விஜய்: பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், இன்று கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக வலம் வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சில காட்சிகளை மட்டும் ரீ-ஷூட் செய்ய முடிவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். விடுதலை 2 வெளியானதுமே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
வெற்றிமாறனின் ஃபேவரைட் ஹீரோ தனுஷ் தான் என்றிருந்த நிலையில், விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, வாடிவாசலில் சூர்யா என ரூட்டை மாற்றிவிட்டார். முன்னதாக அவர் கமல், விஜய் ஆகியோருக்கும் தன்னிடம் ஒரு கதை இருப்பதாகக் கூறியிருந்தார். இதில், விஜய்யின் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.
அதனால், வாடிவாசல் படம் வெளியானதும் விஜய் – வெற்றிமாறன் கூட்டணி இணையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதேபோல், இன்னொரு பக்கம் கமல்ஹாசனும் வெற்றிமாறனுடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் கமல் அல்லது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.
ஏற்கனவே வடசென்னை 2ம் பாகத்திற்காக தனுஷ் கால் கடுக்க காத்திருக்கிறாராம். ஆனால், அவரிடமே வெற்றிமாறன் இன்னும் வட சென்னை 2ம் பாகத்துக்கு ஓக்கே சொல்லாமல் சைலண்டாக இருக்கிறாராம் வெற்றிமாறன். சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.