ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம்ட பஹநகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளாயின. ஷாலிமர்- சென்னை சென்டிரல் கோரமண்டல் ரயில் மற்றும் பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் ஆகியவை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் மொத்தம் 17 பெட்டிகள் உருக்குலைந்து இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. ஒடிசாவில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்புப்பணிகள் மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இந்நிலையில் ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் பிரதமர் மோடி கட்டாக் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களை விசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட மம்தா பானர்ஜி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே தமிழகத்தில் இருந்தும் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒடிசா சென்றுள்ளனர். அவர்கள் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்து மீட்பு மற்றும் சிகிச்சை பணிகளை பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதேபோல் தமிழக அரசும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.