Plan to prevent minors from engaging in terrorist activities! | பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சிறார்களைத் தடுக்க… திட்டம்!

புதுடில்லி : நம் நாட்டில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரில் இளஞ்சிறார்கள் அல்லது 18 வயது நிரம்பியவர்களே அதிகம் உள்ளதால், இதை தடுக்கவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை சந்திக்கும் மிக முக்கிய பிரச்னையாக பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளன.

கவலை

சிறு குழுக்களில் துவங்கி, பெரிய அளவில் செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா, அல் – குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளால் நாள்தோறும் உயிர் பலியும், பொருட்சேதமும் அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியில் பா.ஜ., அரசு அமைந்தபின், இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் கட்டுக்குள் இருந்தாலும், இவற்றை அதிகரித்து, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றன.

நக்சல் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் இருக்கும் சர்வதேச எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்கள் மத்திய பாதுகாப்பு அமைப்புகளை கவலையில் ஆழ்த்தி உள்ளன.

எல்லைக்கு அப்பால் பாக்., பகுதியில் இருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக வீசப்படும் ஆயுதங்கள், போதைப் பொருட்களை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடத்தி, பயங்கரவாதிகள் வசம் சேர்த்து வருகின்றனர்.

இதில் இளஞ்சிறார்களும், 18 வயது நிரம்பியவர்களும் அதிகளவில் ஈடுபடுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கப்படுவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எளிதில் கிடைக்கக்கூடிய வெடி பொருட்களை பயன்படுத்தும் இவர்கள், பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

போதிய படிப்பறிவு இல்லாததே, சிறுவர்கள் அதிகளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட காரணமாக உள்ளது.

எதிர்பார்ப்பு

சில நேரங்களில் அப்பாவி தோற்றமுடைய இந்த சிறுவர்கள், பயங்கரவாத வழியில் சிந்திக்கின்றனர் என்பது கூட நம்ப முடியாததாக இருக்கிறது. வெடிபொருட்களை கையாள்வது குறித்து இணையத்தில் எளிதில் கிடைக்கும் தகவல்களும் இதற்கு காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண, மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகளின் மாநாட்டை விரைவில் நடத்த, மத்திய உள்துறை அமைச்சகமும், ராணுவ அமைச்சகமும் திட்டமிட்டுள்ளன.

இந்த மாநாட்டில், எல்லை பகுதியில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த இளஞ்சிறார்கள் பயங்கரவாத செயல்களை ஆதரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வியூகங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு சீர்திருத்தப் பள்ளியில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு உரிய கலந்தாய்வு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்களும் முன்னுதாரணமாக இருப்பதால், அவர்களுக்கும் உரிய ஆலோசனைகள் மற்றும் கலந்தாய்வு அவசியமாகிறது.

எனவே, இதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது-.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.