புவனேஷ்வர்: ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? என்று திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான ‘கவாச்’ கிடைக்கவில்லை என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகத்தையும், மோடி அரசியையும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? ஏன் மொத்த இந்திய ரயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது..
மத்மா பானர்ஜி (2011 -2012) ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System ( ரயில் மோதுவதை தவிர்க்கும் அமைப்பு ) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை இந்த தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மூன்று நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
கவாச் என்றால் என்ன? ( கவாச் – கவசம்)
ரயில்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம்தான் இந்த கவாச். அதாவது இரண்டு ரயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சியாக ரயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பம் தான் கவாச்.
ஆத்மநிர்பர் பாரத் திடத்தின் ஒரு பகுதியாக 2022 பட்ஜெட்டில் கவாச் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ் மொத்தம் 2,000 கி.மீ ரயில் நெட்வொர்க் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
ஆனால் தற்போது விபத்து எற்பட்டுள்ள ரயில்வே பாதை கவாச் தொழில் நுட்பத்தின் கீழ் இல்லை என்று இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.