ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் ராணுவம், விமானப்படையினருடன், மருத்துவக் குழுவினரும் துரிதமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு உதவினர்.
ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை, கனரக உபகரணங்கள் மற்றும் ராட்சத கிரேன்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
இதன் வாயிலாக, ரயிலில் சிக்கி இருந்த 44 பேரை உயிருடன் மீட்டதுடன், 71 பேரின் உடலையும் மீட்டனர். கவிழ்ந்த ரயில் பெட்டிகளுக்கு இடையே யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிட்டனர். இதேபோல் விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்காக புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இரண்டு மருத்துவ குழுவினரும், கட்டாக் மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இது தவிர, மீட்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, விமானப்படைக்கு சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement