வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே..
சினிமா என்பது கண்டுபிடிக்கப்பட்டு 1931ம் ஆண்டு தமிழில் முதல் பேசும் படமாக வெளிவந்த படம் 'காளிதாஸ்'. அதன்பின் 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஹரிதாஸ்' திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் என்று பேசப்பட்டு 133 வாரங்கள் ஓடியது என்பது வரலாறு. அதன் பிறகு எண்ணற்ற படங்கள் 25 வாரங்கள், 100 நாட்கள், 50 நாட்கள் என விழா எடுக்குமளவிற்கு வெற்றிகரமாக ஓடி கொண்டாடப்பட்டது.
25 வாரங்கள், அதாவது 175 நாட்கள் ஓடிய படங்களுக்கு 'சில்வர் ஜுப்ளி' என விழா எடுத்து ஆரவரமாகக் கொண்டாடுவார்கள். வருடத்திற்கு சுமார் 10 படங்களாவது 100 நாட்கள் ஓடிவிடும். சில படங்கள் 50 நாட்கள் வரை கடக்கும். ஒரு காலத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் என வருடக் கடைசியில் சினிமா ரசிகர்கள் தேடிப் பிடித்துப் பார்ப்பார்கள். அதில் நான்கு காட்சிகள் ஓடிய படம் எது, பகல் காட்சியில் மட்டும் ஓடிய படம் எது என்று அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் ஜாலியாக சண்டையும் போடுவார்கள்.
ஆனால், இப்போது ஒரு சில படங்கள் ஒரு காட்சியைத் தாண்டுவது கூட மிகக் கடினமாக உள்ளது. படம் வெளியான நாளில் கூட படம் பார்க்க யாருமே வராமல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஒரு வெள்ளிக்கிழமையில் வெளியாகும் படங்கள் அடுத்த வெள்ளிக்கிழமை வரை தாக்குப் பிடிப்பது பெரும் சிரமமாக உள்ளது. வெற்றிகரமான 2வது வாரம், 3வது வாரம், 25வது நாள், 50வது நாள் போஸ்டர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அதற்குப் பதிலாக வெற்றிகரமான 2வது நாள், 3வது நாள் போஸ்டர்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. 4வது நாள் போஸ்டர்களைக் கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம் 4வது நாள் திங்கள்கிழமை வந்துவிடுவதால் அன்றைய தினம் ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் பார்க்க முடிவதில்லை.
அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், நான்கைந்து தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். ஆனால், இப்போது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்கள் கூட 25 தியேட்டர்கள் வரை வெளியாகிறது. அதனால், வாரக் கணக்கிலும், 50 நாளைக் கடந்தும் படங்கள் ஓடுவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது.
முன்பெல்லாம் ஒரே ஒரு டிவி சேனல் மட்டுமே, பிறகுதான் தனியார் டிவி சேனல்கள் வந்தது. அதன்பின்னர் அவற்றில் சீரியல்கள் அதிகமாக வந்து பெண்களைக் கவர ஆரம்பித்தது. அவர்களுடன் சேர்ந்து ஆண்களும் கூட சீரியல்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது கூடுதலாக ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. புதிய படங்கள் வெளிவந்த நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழில் மட்டுமே படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு வேற்று மொழிப் படங்கள், ஹாலிவுட் படங்களைக் கூட தமிழில் பார்க்கும் வசதி கிடைத்துவிட்டது. தியேட்டர்களுக்குச் சென்று ஒரு டிக்கெட்டுக்கு 200 ரூ, பாப்கார்னுக்கு 400 ரூபாய், பார்க்கிங்குக்கு 200 ரூபாய் என செலவு செய்யும் பணத்தில் ஒரு சில ஓடிடி தளத்தில் சந்தாதாரராக சேர்ந்தால் அதிகப் படங்களைப் பார்க்கலாம் என்று ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்டது. அதனால்தான் இப்போது ஐமேக்ஸ், எபிக் என சினிமா தியேட்டர்களின் திரைகளை இன்னும் பிரம்மாண்டமாய் மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் இப்போதிருப்பதை விட இன்னும் பல அகன்ற திரை தியேட்டர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படி பல காரணங்களால் வெற்றிகரமான 2, 3, 4, 5வது வாரம் என்ற போஸ்டர்களை இந்தக் காலத்தில் பார்க்க முடியவில்லை. வெறும் 2வது நாள், 3வது நாள் என்றே பார்க்க முடிகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் வெற்றிகரமான 2வது காட்சி, 3வது காட்சி, 4வது காட்சி என போஸ்டர் அடிக்கும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.