ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்கள் பாலசோர், சோரோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டதால், முதலுதவி அளிக்க முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் திணறினர்.
ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், ஏராளமான ஆம்புலன்சுகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் பாலசோர், சோரோ, பத்ரக், ஜஜ்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலசோர் அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டதால், படுக்கைகள் மற்றும் இருக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இடப்பற்றாக்குறையால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தோட்டங்கள் உட்பட பல இடங்களில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
நம்பி வந்த அனைவருக்கும் உரிய இடம் ஒதுக்கி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் சிகிச்சை அளித்தது, மனிதாபிமானத்தை துளிர்க்கச் செய்தது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயணியர், மருத்துவமனை ஊழியர்களுடன் உரையாடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் நிலவியது.
இருப்பினும், காயங்களின் தன்மை அறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து, பாலசோர் மாவட்ட கூடுதல் மருத்துவ அதிகாரி மிருத்யுன்ஜெய் மிஸ்ரா கூறுகையில், “பல வருடங்களாக நான் டாக்டராக பணியாற்றி வருகிறேன். இது போன்றதொரு குழப்பமும், மனவேதனையும் நிரம்பிய சூழலை கண்டதில்லை.
“ மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடிய விடிய முதலுதவி அளித்தனர்,” என்றார்.
அடுத்தடுத்து வந்தவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் இருந்தவர்கள் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தப்பட்டு அடுக்கிவைக்கப்பட்ட உடல்களை அடையாளம் காண இறந்தவர்களின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது நெஞ்சை பிசைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்