மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த்
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலகெங்கிலும் சேர்த்து இதுவரை 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் வெற்றி சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் திடீரென சம்மந்தமே இல்லாமல் 'கார்த்திகேயா 2' படத்தின் இயக்குனர் சந்து மொண்டேத்தி பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.
“விஸ்வாசம் என்றால் இவரைப்போல இருக்க வேண்டும். கார்த்திகேயா 2 படத்திற்கு முன்னதாகவே அந்தப்படம் முடிந்ததும் இன்னொரு படம் எனக்கு பண்ணித் தாருங்கள் என்று கேட்டிருந்தேன். அந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னால் அவருக்கு மிகப்பெரிய இடத்திலிருந்து எல்லாம் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவற்றை மறுத்துவிட்டு என்னுடன் இணைந்து மீண்டும் படம் இயக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் ஒரு சிலரோ நம்மிடம் படம் இயக்கிவரும் போது ஒரு மாதிரியாகவும் படம் வெற்றிபெற்ற பிறகு அந்த விஸ்வாசம் மறைந்து பணம் மட்டுமே பிரதானமாக இருக்கின்றனர்” என்று கூறினார்.
சோசியல் மீடியாவில் இவரது பேச்சு வெளியானதை தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் பரசுராமை குறிவைத்து தான் இப்படி பேசி உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது உண்மையும் கூட. ஏனென்றால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஒரு படம் தயாரிக்க ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான முன்தொகையும் கொடுத்து இருந்தார் அல்லு அரவிந்த். ஆனால் சமீபத்தில் அதே கூட்டணியை தயாரிப்பாளர் தில் ராஜூ தன் பக்கம் இழுத்து விட்டார். இந்த கோபத்தில் தான் 2018 பட விழாவில் பரசுராம மீதான தனது கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் அல்லு அரவிந்த்.