புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.
ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50 மணியளவில் 3 ரயில்கள் மோதி இந்த விபத்து நடந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு புறம் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாலசோர் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலசோர், கட்டாக், குர்தா, ஜெய்ப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அது போல் புவனேஸ்வரம், கட்டாக் நகரங்களிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் இடி தாக்கும் அபாயமும் இருப்பதால் மக்கள் வானிலை அறிக்கையை பார்த்து செயல்படுமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியிருந்ததது.