ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடைமைகள் தண்டவாளத்தில் ரத்த கரையுடன் சிதறி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த காதல் கடிதங்கள் இணையத்தில் வைரலாகி இதயங்களை கனமாக்கியுள்ளது.
சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாசூர் அருகே வந்தபோது லூப் பாதையில் இருந்த கூட்ஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா ரயில் விபத்துக்குள்ளான பெட்டிகள் மீது தடம் புரண்டது.
இந்த விபத்துக்கு முழு முதல் காரணமாக இருக்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், எதற்காக நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது லூப் பாதையில் திரும்பி மோதியது என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து மத்திய குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது; பலாசூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூட்ஸ் ரயிலை நேராக கடந்து செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்ஸ் ரயில் நின்றிருந்த தண்டவாளத்தில் செல்ல தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது கூட்ஸ் ரயில் பக்கத்துக்கு தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தது. அதற்கு பக்கத்துக்கு பாதையில் கோரமண்டல் வந்து கொண்டிருந்தது. அப்போது பச்சை சிக்னலுக்கு பதிலாக ரெட் சிக்னல் போட்டதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் பாதையில் மாறி கூட்ஸ் ரயில் மீது மோதி விபத்துக்குளாகியுள்ளது.
இந்த சோகமான நிகழ்வுக்கு மத்தியில் விபத்துக்குள்ளான ரயில்களில் ஏதோ ஒரு ரயிலில் பயணித்த பயணியின் காதல் கடிதம் தண்டவாளத்தில் சிதறி கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. சில வண்ணங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களுடன் பெங்காலியில் அந்த காதல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. “ஓல்போ ஓல்போ மேக் தேகே பிரிஸ்டி ஷ்ரிஸ்டி ஹோய், சோட்டோ சோட்டோ கோல்போ தேகே பலோபாஷா ஷ்ரிஸ்டி ஹோய்” என எழுதப்பட்டுள்ளது. அதை தமிழில் மொழி பெயர்த்ததில் ‘ சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன, சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன” என்று உள்ளது.
மகனின் உடலை தேடிய தந்தையின் அழுகுரல், குழந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொம்மைகள், காதலிக்காகவோ, காதலனுக்காகவோ எழுதப்பட்டிருந்த கவிதைகள், தாய், தந்தை, பிள்ளைகளை பார்க்க சென்றவர்களின் ஏக்கம்.. இவை அனைத்தும் என்றும் நம் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்.