மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் ஜூன் 3 நேற்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக தோட்டக்கலைத் துறை சார்பாக நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சி மூன்று நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இதில் பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ₹50-ம், மாணவர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ₹20-ம் வசூலிக்கப்படுகிறது.
குளிரூட்டப்பட்ட அறையிலிருந்த கண்காட்சியினுள் நுழைந்ததுமே, தமிழ் மொழியின் மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தை காட்சிப்படுத்தும் நோக்கில், இரண்டு மிகப்பெரிய சிலம்பு மாதிரிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ரோஜா, வெள்ளை நிற செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு முரசுகளும், பெரிய அளவிலான தேர் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஏராளமான வெற்றிலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த வீடு, ஏலக்காய், கருஞ்சீரகம், மிளகு, கிராம்பு, சோம்பு, சீரகம், வெந்தயம், எள், மிளகாய் விதைகள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த ஒரு யானைக் குடும்பம் அழகாக இருந்தது.
வண்ண ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண்ணின் சிலை, தற்காலிகமாக அமைக்கப்ட்டிருந்த சுவர்களை அலங்கரிக்கும் வகையில், மலர்களால் உருவாக்கப்பட்ட ஒட்டகம், மீன், பட்டாம் பூச்சி, படகு, கடற்கன்னி போன்ற உருவங்கள் கண்களைக் கவரும் வகையில் இருந்தது.
பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், வீடுகளுக்கே வந்து வளையல் விற்கும் வளையல் வியாபாரியின் உருவம், தானியங்கள் விற்கும் பெண்ணின் உருவம், மாட்டு வண்டி மற்றும் தங்க நகைகள் செய்யும் பொற்கொல்லரின் உருவம், இயற்கையில் முறையில் வைத்தியம் செய்யும் சித்தர்களின் உருவம், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கத்தரிக்காய், கோவைக்காய், தக்காளி, கேரட், குடை மிளகாய், உள்ளிட்ட காய்கறிகளால் செய்யப்பட்ட, பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பில் சமைக்கும் பெண்ணின் உருவம், என ஏராளமான மலர்களால் கண்களைக் கவரும் வகையில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
மேலும் நெய்தல் நிலத்தை காட்சிப்படுத்தும் விதமாக, கடலில் இருப்பது போன்ற ஒரு படகும், உப்பு வியாபாரியும், திராட்சை, ஆரஞ்சு, சுரைக்காய், கிண்டி, செர்ரி போன்ற பழங்களால் செய்யப்பட்ட மீன் விற்கும் பெண்ணின் உருவமும் காண்போரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் கண்காட்சியில் உதகை, திண்டுக்கல், பெங்களூர், ஒசூர் போன்ற இடங்களிலிருந்து மலர்கள் தருவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மலர் கண்காட்சியில் தோட்டக்கலை கல்லூரியைச் சேர்ந்த பல்வேறு மாணவ மாணவிகள் பங்காற்றியுள்ளனர். அதில் ஒருவரான அபர்ணாவிடம் பேசியபோது, “நாங்க மாதாவரத்திலிருக்கும் தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரியில் படிக்கிறோம். எங்களைப் போல பல்வேறு தோட்டக்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பூக்களெல்லாம் மே-31ல் தான் பெங்களூருவிலிருந்து வந்தது. மூன்று நாட்களாக ஷிப்ட் படி பூக்களை அலங்காரம் செய்தோம். தோட்டக்கலை அலுவலர்களின் அறிவுரைப் படி நாங்களும் எங்கள் பேராசிரியர்களும் தமிழர் வாழ்வியலை மலர்க்கலைக் கொண்டு தத்துரூபமாக காட்சிப்படுத்த முற்பட்டோம்.
இதில் சிவப்பு,மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் ரோஸ்கள்,செவ்வந்திப்பூ, மல்லிப்பூ, டிசம்பர் பூ , ஆந்தூரியம், ஹெலிகொனியா, ஆர்கிட், வில்லியம், துலிப் போன்ற பல பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்திருக்கிறோம். பார்வையாளர்கள் எல்லோரும் பார்த்து ரசிப்பது மகிழ்வாக இருக்கிறது” என்றார்.
மற்றொரு மாணவரான ஆஷிக் முகமத் என்பவர் கண்காட்சியில் பங்காற்றிய தனது அனுபவம் பற்றி கூறுகையில், “இந்த மலர்க்கண்காட்சி சென்னையில் இரண்டாவது வருஷம் நடைபெறுகிறது.
இதில் மொத்தம் மூன்று கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்காற்றியிருக்கிறோம். நாங்கள் பணியாற்ற எங்களுக்கு தோட்டக்கலையைச் சேர்ந்த ஊழியர்களும், துப்பரவு பணியாளர்களும் சிறப்பாக உதவினார்கள்.
மலர்கள் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு, குடைமிளகாய், சேனைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளையும் ஆரஞ்சு , கிரேப்ஸ் , ஆப்பிள் போன்ற பழங்களையும் கொண்டு வித்தியாசமாக அலங்காரம் செய்தோம். பூக்களை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தாலும் வாடாமல் இருப்பதற்காக தினமும் பூத்தண்டுகளை வெட்டி 3அடி வரை தனித்தனியாக தண்ணீரில் வைப்போம் இதனால் பூக்கள் வாடாமல் அழகாக காட்சியளிக்கும்” என தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.