“நாங்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரிகிறோம்” என்று வீடியோவில் தோன்றி ஒரு செலிப்ரிட்டி தம்பதி தங்கள் பிரிவை அறிவிப்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா? Nas Daily என்ற பிரபலமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் தளம் மூலம் அறியப்பட்ட சோஷியல் மீடியா பிரபலம் நுசீர் யாசின், தன் ஆறு ஆண்டு கால வாழ்க்கைத்துணையான அலின் டமிரை இப்படித்தான் பிரிந்தார். dearalyne என்ற பெயரில் அவரும் சோஷியல் மீடியா பிரபலம்தான். இருவருக்குமே மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் பல சோஷியல் மீடியா தளங்களிலும் இருக்கிறார்கள்.
இருவரும் இணைந்து பிரிவை அறிவித்த 13 நிமிட வீடியோவை சுமார் 7.3 கோடி பேர் 12 நாள்களில் பார்த்திருக்கிறார்கள். ‘இது விளம்பரத்துக்காகச் செய்யும் ஸ்டன்ட்டா’ என்று சிலர் கொதிக்கிறார்கள். ‘இப்படித்தான் பிரிவை அறிவிக்க வேண்டுமா? இதைக்கூட வீடியோவாக வெளியிட்டு வ்யூஸ் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? கடைசியில் இவர் தன் சொந்த சோகக்கதையையும் கன்டென்ட் ஆக்கி காசு பார்த்துவிட்டாரே’ என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். ‘தனிப்பட்ட விஷயங்களை இப்படிப் பொதுவெளியில் ஒரு திரைப்படக் காட்சி போலப் பகிர்வது நியதியா?’ என்று சிலர் அறக்கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், இதைப்பற்றி இருவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம், இருவரும் வாழ்வில் இணைவதையே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு வீடியோவில்தான் தங்கள் வியூவர்ஸுக்கு அறிவித்தார்கள். ”மிகச் சிறந்த விஷயங்கள்கூட சில தருணங்களில் முடிவுக்கு வந்தாக வேண்டும். நாங்கள் இணைந்திருப்பது இன்று முடிவுக்கு வருகிறது. நாங்கள் இணைந்தபோது உங்களிடம்தான் முதலில் சொன்னோம். எங்கள் உயர்வு, தாழ்வுகளில் நீங்கள்தான் உடன் இருந்தீர்கள். எங்கள் வெற்றிகளைக் கொண்டாடினீர்கள். பிரிவதையும் உங்களிடமே முதலில் சொல்கிறோம். இதுதான் நாங்கள் உருவாக்கிய வீடியோக்களில் மிக நீளமானது. பல தம்பதிகளுக்கு உதவுமே என்பதற்காக இதை வெளிப்படையாகப் பேசுகிறோம். நாங்கள் செய்த தவறுகளை அவர்கள் செய்யாமல் தவிர்த்து தங்கள் உறவைக் காப்பாற்றிக்கொள்ள எங்கள் அனுபவங்கள் உதவும்” என்று ஆரம்பத்தில் சொல்கிறார்கள்.
நுசீர் யாசின் இஸ்ரேலில் பிறந்த பாலஸ்தீனியர். இஸ்லாமியராக வளர்க்கப்பட்டாலும், பிறகு தன்னை மதப்பற்றில்லாத இஸ்லாமியராக அறிவித்துக்கொண்டவர். இஸ்ரேலில் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து, அதற்கு மத்தியில் நன்கு படித்து, அமெரிக்காவுக்குப் போய் உயர்கல்வி முடித்து, ஐ.டி துறையில் வேலை பார்த்து, தான் ஒரு கன்டென்ட் கிரியேட்டர் ஆக வேண்டும் என்ற முனைப்பில் வேலையை விட்டவர். ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மட்டுமே வீடியோக்கள் போட்டு வந்தார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் கூப்பிட்டு நேரில் சந்திக்கும் அளவுக்கு அவருடைய ஃபேஸ்புக் பக்கம் முன்னணியில் இருக்கிறது. வீடியோக்கள் உருவாக்குவதற்காகவே சிங்கப்பூர் வந்து செட்டில் ஆனவர், அதன்பின் இப்போது துபாய் போய் வசிக்கிறார். அவருக்கு 31 வயதாகிறது. இப்போதும் அவர் எந்த வீடியோ போட்டாலும் எல்லா சோஷியல் தளங்களிலும் கோடிக்கணக்கில் மக்கள் பார்க்கிறார்கள்.
அலின் டமிர் அமெரிக்காவில் பிறந்த யூதர். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரின் டிராவல் வீடியோக்களுக்குக் கோடிக்கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். யாசினை விட 2 வயது மூத்தவர். இஸ்ரேலில் பிறந்த பாலஸ்தீனியரும், அமெரிக்காவில் பிறந்த யூதர் ஒருவரும் வாழ்வில் இணைவதைப் பலரால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஆனால், சோஷியல் மீடியா செலிப்ரிட்டி என்ற அந்தஸ்து இருவரையும் இணைத்தது.
ஆறு ஆண்டுகள் இருவரும் இணைந்து வீடியோக்கள் உருவாக்கிச் சம்பாதித்தார்கள். வீடியோ உருவாக்குவதைக் கற்றுத் தரும் பயிற்சி நிலையம் தொடங்கினார்கள். 70 நாடுகளுக்குச் சுற்றுலா சென்றார்கள். இந்தியாவிலும் பாப்புவா நியூ கினியாவிலும் வந்து உள்ளூர் மரபுகளின்படி திருமணமும் செய்துகொண்டார்கள். (அவற்றையும் வீடியோவாக்கி காசு பார்த்ததும் நடந்தது!) இப்போது பிரிந்துவிட்டார்கள். அதை ஓர் உரையாடல் போலவே இருவரும் பேசுகிறார்கள். இடையில் சிரிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், அழுகிறார்கள்.
இருவரும் இணைந்தபோது யாசின் ஒரு தொடர் பணியிலிருந்தார். அதாவது 1,000 நாட்கள் தொடர்ச்சியாக ஒரு நிமிட வீடியோக்களை ஷூட் செய்து, எடிட் செய்து Nas Daily பக்கத்தில் பதிவேற்றுவது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்து இதைச் செய்தார். ”நீ மூன்று வருஷங்கள் இதுதான் உனக்கு முக்கியம் என்று இருந்தபோது, நான் உனக்கு உதவி செய்தேன். உன் லட்சியத்துக்காகக் கூடவே ஓடிவந்து எல்லாவற்றையும் செய்தேன். ஆனால், அது முடிந்தபிறகும் உன் வாழ்க்கையில் எனக்கு நீ முன்னுரிமை தரவில்லை. இந்த ஆறு ஆண்டுகளாக நீதான் முக்கியம் என்று நான் இருக்கிறேன். ஆனால், நான் உனக்கு எப்போதும் முக்கியமானவளாகப் படவில்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அலின்.
“உன்னைப் போல உணர்வுபூர்வமாக என்னால் இருக்க முடியாது. என்னால் அப்படி ‘நீதான் முக்கியம் என்று இருக்க முடியாது. ஒரு மாதம் இருக்கலாம், சில மாதங்கள் இருக்கலாம், ஒரு வருஷம்கூட இருக்கலாம். ஆனால், 60 வருஷங்களுக்கு அப்படியெல்லாம் இருக்க என்னால் முடியாது” என்கிறார் யாசின்.
“அது உண்மையில்லை. நீ உன் நிறுவனத்துக்கு எப்படிப்பட்ட முதலீடுகளையும் செய்யத் தயங்குவதில்லை. ஆனால், நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நேரத்தை முதலீடு செய்ய நீ பயப்படுகிறாய். எல்லா நேரங்களிலும் உனக்கு ஆதரவாக நான் இருந்தேன். வாழ்க்கை முழுக்கக்கூட அப்படி இருந்திருப்பேன். ஆனால், நீ எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை” என்று வெடிக்கிறார் அலின்.
அவர்கள் எப்போதோ வீட்டில் சண்டை போட்டுக்கொண்ட விஷுவல்களும் இடையிடையே ஃபிளாஷ்பேக் காட்சிகள் போல வந்து போகின்றன. ”நாம் இருவரும் சேர்ந்து வெளியில் போவதே ஒரு கட்டத்தில் குறைந்துவிட்டது. ஒரு இனிமையான உறவில் உனக்கு என்ன தேவைப்பட்டதோ, அதை என்னால் கொடுக்க முடியவில்லை, எனக்குத் தேவைப்பட்டதை உன்னால் கொடுக்க முடியவில்லை. நமக்கு இடையிலான அன்பு காணாமல் போய்விட்டது. நீ என்னை நேசிப்பதாகச் சொல்கிறாய். ஆனால் அந்த நேசத்தை என்னால் உணர முடியவில்லை. நம் இரண்டு பேருக்கும் லட்சியங்கள் வேறு, வாழ்க்கைமுறைகள் வேறு, நம் குணங்களும் வேறு வேறானவை” என்கிறார் யாசின்.
அலின் கோபமாக, ”உன் உலகத்தில் என்னைப் பொருத்திக்கொள்ள எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், நான் என் உலகத்தில் சுதந்திரமாக இருப்பதுதான் சரி என்று இப்போது தோன்றுகிறது. நான் உன்னைப் பற்றி, உன் வளர்ச்சி பற்றி, உன் மகிழ்ச்சி பற்றி எப்போதும் நினைக்கிறேன். ஆனால், நீ என்னைப் பற்றி எப்போதும் நினைக்கவில்லை. உன்னைப் பற்றியும் உன் கம்பெனியைப் பற்றியும் மட்டுமே நினைக்கிறாய்” என்று குற்றம் சாட்டுகிறார்.
“அடிப்படையான விஷயங்களில்கூட நம் இருவருக்கும் ஒரே மாதிரியான கருத்து ஏற்படுவதில்லை. எப்படி வாழ்வது, எங்கே வாழ்வது, குடும்ப விஷயங்கள் என்று எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இன்னும் நான்கைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், இந்த வாழ்க்கையில் எதுவுமே இருக்காது என்று தோன்றுகிறது. அதுவரை காத்திருக்காமல் இப்போதே பிரிந்துவிடுவோம்” என்கிறார் யாசின். “இந்த உறவில் அன்பே இல்லை. பிரிவதே சரி, இதை நினைத்துக் கவலையாக இருக்கிறதா?” என்று அவர் அலினிடம் கேட்க, “ஏற்கெனவே இந்த உறவில் நான் சோகமாகத்தான் இருக்கிறேன். புதிதாக இதற்காகக் கவலைப்பட என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார்.
கடைசியாக இருவரும் இணைந்து கடந்த மாதம் துருக்கி சென்றபோது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ‘கடைசி புகைப்படம்’ என்று அதைக் காட்டி இருவரும் சில நொடிகள் கண்ணீர் சிந்துகிறார்கள். “ஆறே ஆண்டுகளில் இருவரும் வேறு வேறு மனிதர்களாக ஆகிவிட்டோம். நாம் இணைந்து சென்ற பாதை பிரிகிறது. இங்கிருந்து பிரிந்து நான் செல்லும் பாதைதான் சிறந்தது” என்று யாசின் சொல்ல, “இல்லை, நான் போக இருக்கும் பாதைதான் சிறந்தது” என்று வாதிடுகிறார்.
“பிரிவு என்பது சுலபமானது இல்லை. இரண்டு மனிதர்கள் சந்தித்துக்கொண்டார்கள். ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்தினார்கள். இருவரும் ஒருவராக மாறுவதற்கான முயற்சியை ஒவ்வொரு நாளும் செய்தார்கள். ஆனால், அந்த முயற்சி தோற்றது. வாழ்க்கை முழுக்க கசப்புடன் இணைந்திருக்காமல், இனிதே பிரிந்துவிட்டார்கள்” என்று சொல்லி வீடியோவை முடிக்கிறார்கள்.
முன்னரே குறிப்பிட்டதுபோல, விவகாரத்து என்ற தனிப்பட்ட விஷயத்தையும் வணிகமாக்குவதா என்ற விவாதத்தை இது எழுப்பியிருக்கிறது. ஏற்கெனவே ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கிலும் இதுவே நடந்தது. விவாகரத்தைத் தாண்டி, புகழுக்குக் களங்கம் விளைவித்ததாக அதில் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். பல யூடியூப் சேனல்கள் அந்த வழக்கை ‘லைவ்’ செய்து கல்லா கட்டின. அதிலும் அது தனிப்பட்ட இருவர் சார்ந்த பிரச்னையாக மட்டும் பார்க்கப்படாமல் ஆண் vs பெண் வழக்காகவே முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த சோசியல் மீடியா புகழ் தம்பதியினரைப் பொருத்தவரை, இருவருமே தங்களின் திருமணத்தையே இப்படித்தான் அறிவித்தனர் என்பதால் விவாகரத்தையும் அந்த ரீதியிலேயே அணுகியிருக்கலாம். ஆனால், இதிலும் வணிக நோக்கம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்று பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு தனிப்பட்ட நிகழ்வுகளைத் தனியார் தொலைக்காட்சிகளிலும் சரி, யூடியூப் சேனல்களும் சரி, காசாக மாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் ஒரு வகை.
அதைத் தாண்டி இந்த வீடியோவில் அவர்கள் வெளிப்படையாக `விவாதித்து’க் கொண்ட கருத்து முரண்பாடுகள், வைத்துக் கொண்ட விமர்சனங்கள், தங்களின் தனிப்பட்ட அடையாளங்களுக்கான வாதங்கள், குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ன என்று பேசிக்கொண்ட சமாச்சாரங்கள் போன்றவற்றில்தான் ஒளிந்திருக்கிறது நமக்கான படிப்பினை.