இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது சக வீரர்களுடன் சேர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தயாராகி வருகிறார். மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (WTC 2023 Final) இந்திய அணிக்கு வென்று கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 11 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால், இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்ற தீரா ஆசையுடன் வீரர்கள் உள்ளனர். மேலும், ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடைசியாக கூட இருக்க வாய்ப்புள்ளது என்பதால், இந்தப் போட்டியை வெல்ல அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மா இந்த தொடருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா ஓய்வு முடிவு
கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 36 வயதாகிறது. இந்த வயதில் டெஸ்ட் போட்டிக்கு ஃபிட்டாக வைத்திருப்பது இனி அவருக்கு கடினம். அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்த வடிவ போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அடுத்தடுத்த தொடர்களுக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்பதால் பிசிசிஐ தேர்வுக்குழுவும் அவரது முடிவை எதிர்நோக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா கேப்டன்
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் அவர், இந்திய அணியில் உள்ள மூன்று ஃபார்மட்டுகளுக்கும் கேப்டனாகவும் உள்ளார். அதனால் அவர் மீதான அழுத்தத்தைக் குறைக்க, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைபெற முடிவு செய்யலாம். ஏனென்றால் அவருக்கு இப்போது ODI உலகக் கோப்பை உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பையும் நடக்க இருக்கிறது. இதற்கு கவனம் செலுத்தி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் என அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ரோகித். அதற்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் ஒருநாள் போட்டிக்கு தயாராகும் அவர், அடுத்தாக 20 ஓவர் தொடருக்கு பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஃபார்மில் இல்லை
அதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் அழுத்ததை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இருக்கிறார் ரோகித். அவரைப் பொறுத்தவரையில், கடந்த பல போட்டிகளில் ஃபார்மில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஓய்வு முடிவைப் பற்றி அவர் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு கேப்டனாக, எந்த வீரரும் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதிலும் ஒரு கேப்டனாக அவருக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்தவகையில், டெஸ்ட் பார்மேட்டில் விடைபெற்று, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த ரோஹித் முடிவெடுக்கலாம்.