ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்த, காயமடைந்த நபர்களின் புகைப்பட விவரங்கள்…. எங்கு, எப்படி பார்ப்பது?

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி மாலையில் நடந்த பயங்கர ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதில் 275 பேர் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்களது உறவினர்களுக்கு ஒடிசா ரயில் விபத்தில் என்ன ஆனது?

ஒடிசா ரயில் விபத்து

காயமடைந்து எங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்? போன்ற கேள்விகளுடன் இருந்து வருகின்றனர். இவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ரயில்வே மற்றும் ஒடிசா மாநில அரசு செய்துள்ளது. அதன்படி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் விவரங்கள் மூன்று இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவை,

https://srcodisha.nic.in/

https://www.bmc.gov.in

https://www.osdma.org

எப்படி அடையாளம் காண்பது?

இந்த இணையதளங்களில் உயிரிழந்த பயணிகளின் விவரங்களும் குறிப்பிட்ட எண்களுடன் பதிவிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பயணிகளை அடையாளம் காண மட்டுமே. வேறு எந்த தவறான நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிலருக்கு இந்த புகைப்படங்கள் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் பார்க்க வேண்டாம்

எனவே குழந்தைகள் இந்த புகைப்படங்களை பார்க்க வேண்டாம். மீடியாக்கள், தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் இந்த புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை தேவைப்பட்டால் ஒடிசாவில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

புவனேஸ்வரில் சிறப்பு ஏற்பாடுகள்

மேலும் புவனேஸ்வரில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இவர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனைகள், பிணவறைகளுக்கு எப்படி செல்வது? அதற்கான வாகனங்கள் எங்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

உதவி எண்ணும், சேவை மையங்களும்

புவனேஸ்வர் மாநகராட்சி சார்பில் 1929 என்ற இலவச உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேவை மையங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் கட்டாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம், எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி, புவனேஸ்வர் ரயில் நிலையம், பாரமுண்டா பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.