சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை – ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்படுகிறது.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 1000 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் விபத்தால் தண்டவாளங்களில் நிறைய பொருட்கள் சிதறி கிடக்கின்றன. அதனால் அந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் அந்த வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா செல்லும் 12840 என்ற வண்டி எண் கொண்ட ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அது போல் 3 ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ரயில் எண் 22305 பெங்களூர்- ஜசிடி செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று 10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி, இரண்டரை மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு புறப்படும்.
அது போல் ரயில் எண் 12864 பெங்களூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட், பெங்களூரிலிருந்து இன்று 10.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி 2 மணி 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும்.
ரயில் எண் 12246 பெங்களூரிலிருந்து ஹவுரா செல்லும் டூரண்டோ எக்ஸ்பிரஸ் காலை 11.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.