மொகதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும் – தீவிரவாதிகளுக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
அல் ஷாபாப் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் மொகதிசுவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
முன்னதாக அல் ஷாபாப் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு தீவிரமாக நம்பி இருந்தது. இந்த நிலையில் ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து உகாண்டா ராணுவத்தினர் அல் ஷபாப் தீவிரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுக்கு உதவிகள் வந்தன. இந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சோமாலிய அரசுக்கு எதிராக அல்கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச்சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீப காலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.