பாட்னா:
பீகாரில் கங்கை நதிக்கு மேலே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் அப்படியே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுவதும், சாலைகள் கரைவதும் தொடர் கதையாகி வருகிறது. ஒப்பந்தத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளும், லஞ்ச லாவண்யங்களுமே இதற்கு காரணம் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குஜராத்தில் கடந்த மாதம் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட கேபிள் மேம்பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் அநியாயமாக உயிரிழந்தனர்.
விசாரணையில், கடிகாரம் செய்யும் கம்பேனிக்கு பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதே மேம்பாலம் விழுந்ததற்கு காரணம் என தெரியவந்தது. இதேபோல, உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த நெடுஞ்சாலை ஒன்று ஐந்தே நாட்களில் இருக்குமிடம் தெரியாமல் கரைந்து போனது. அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சுமார் 1,710 கோடி செலவில் கங்கை ஆற்றின் மேலே பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவிருந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் பாலத்தை புதுப்பித்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் இந்த பாலம் அப்படியே கங்கை ஆற்றில் இடிந்து விழுந்தது. கட்டுமானப் பணியாளர்கள் வேலை முடித்து சென்ற ஒரு சில நிமிடங்களில் பாலம் உடைந்து விழுந்ததால் யாருக்கும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.
இதனிடையே, இரண்டாவது முறையாக பாலம் இடிந்து விழுந்ததால் பீகார் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேம்பாலம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.