மதுரை: கனடா தமிழ்ச் சங்கம் சார்பில், மதுரை உலகத் தமிழ் சங்க கட்டிடத்தில் வைகைத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடந்தது. கனடா தமிழ்ச் சங்க நிறுவனத்தலைவர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்றார். ஜல்லிக்கட்டு திருவிழாவை நீதிமன்றங்கள் வரை சென்று போராடி மீட்க காரணமாக இருந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரனுக்கு தமிழ் மேன்மையாளர் விருதும், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் மதுரையைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆளுமைகளுக்கும் விருதுகளை நீதிபதி வழங்கி பாராட்டினார்.
விழாவில் நீதிபதி பேசியதாவது: சிறந்த ஆளுமைகளை அடையாளப்படுத்தி இங்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அவர்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களுக்கான முக்கியத்துவத்தை நியாயப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக மொழிகளில் ஒரு மொழி இறைவனால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மட்டுமே. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் எவ்விதமான அறிவியில் சித்தாந்தங்கள், வாழ்வின் கூறுகளை எளிமைப்படுத்த கூடிய எந்த வித வசதியும் இல்லை.
இந்நேரத்தில் கலை, இலக்கியம், படைப்பு, பாடல், இசை, ஓவியம் என அத்தனை கூறுகளை உள்ளடக்கியதாக ஒரு மொழியாக தமிழ் இருந்துள்ளது. குகை வரி வடிவில், ஓவியத்தில் மற்றும் பாரசீக ரோமானியத்தில் கண்டெடுக்கப்பட் ட பழங்கால சான்றுகளின் அடிப்படையில் உலகில் மூத்த மொழியாக தமிழ் உள்ளது.
இந்த மொழி பேச்சுக்கான, தொடர்புக்கான மொழியாக மட்டுமின்றி மனிதனின் மனம், சிந்தனை சார்ந்த இறைத்தன்மையோடு உள்ளது. ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டின் கடைசியில் களப்பிரர் காலத்தில் இந்த மொழி புறந்தள்ளப்பட்டது. 6 நூற்றாண்டில் சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகரால் தமிழ் மொழி மாறுபட்ட வடிவம் எடுத்து, மண்ணிற்கான மொழியாக செழுமை சேர்த்தது.
இறைவனால் தரப்பட்ட ஒரே மொழி தமிழ் என, கம்பன் அடையாளப்படுத்தியுள்ளார். தொல்காப்பியத்தில் அறச்சிந்தனை யுடன் வாழும் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. இவ்வுலகில் எந்த ஒரு புலவனும் படைப்பாளியும் சொல்லி விட முடியாத கூற்றை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என ஒரு தமிழ் புலவன் தெரிவித்துள்ளான். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என ஆறறிவு இல்லாத அனைத்து உயிர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என கூறியதும் தமிழ் மொழியே. அதனால் தான் இந்த மொழி இறைத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள், சோகங்கள் வரக்கூடும். அதற்காக அறமற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறியதும் தமிழ் மொழிதான். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கனடா தமிழ் சங்கத்தின் நிறுவனர் பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.