ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சித்திபேட்டா மாவட்டத்தில் உள்ள புருகுபல்லியில் சர்விதா மெடோஸ் எனும் கட்டுமான நிறுவனம் அப்சுஜா இன்ஃப்ராடெக் மற்றும் சிம்ப்ளி ஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 3,800 சதுர அடியில் இந்த முப்பரிமாண பிரின்டட் கோயிலை கட்ட திட்டமிட்டது.
மோதக வடிவில் விநாயகர் கோயில், சதுர வடிவில் சிவபெருமான் கோயில், தாமரை வடிவில் பார்வதி கோயில் என மூன்று பகுதிகள் இந்த முப்பரிமாண கோயிலில் இடம்பெறுகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் சர்விதா மெடோஸ் நிறுவனம், ஹைதராபாத் ஐஐடி உடன் இணைந்து வெறும் 2 மணி நேரத்தில் சிறிய மேம்பாலத்தை கட்டியது.
இந்நிலையில் சித்திபேட்டாவில் சர்விதா மெடோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத் ஐஐடி விரிவுரையாளர் கே.வி.எல். சுப்ரமணியம் மற்றும் அவரது தொழில் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு முப்பரிமாண கோயில் கட்டுமானப் பணியில் களம் இறங்கியுள்ளது.
தற்போது இக்குழு தாமரை வடிவ பார்வதி தேவி கோயிலை கட்டி வருகிறது. விநாயகர் கோயிலின் மோதகம் மற்றும் சிவன் கோயிலின் முதற்கட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்த கட்டமாக இந்த மூன்று கோயில்களுக்குமான கோபுரங்கள் முப்பரிமாண கட்டிட தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட உள்ளன. இக்கோயில் கட்டிமுடித்தால், இதுதான் இந்தியாவிலேயே முதல் முப்பரிமாண கோயிலாக இருக்கும் என்று சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி துருவ் காந்தி தெரிவித்தார்.