எடப்பாடி பழனிசாமியால் வெவ்வேறு காலத்தில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவருக்கு எதிராக தனித்தனியாக பேசிவந்தாலும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. இதனால் எதிர்ப்பு குரல்கள் வெளியே கேட்காமல் போனது. கட்சியும் முழுதாக எடப்பாடி பழனிசாமி வசம் போனது. இனியும் தனித்து நின்றால் கரைந்து போவோம் என்பதை உணர்ந்த ஓபிஎஸ் அண்மையில் டிடிவி தினகரனை சந்தித்து வெள்ளைக் கொடி காட்டினார்.
மாஜிக்களுக்கு எடப்பாடி உத்தரவு!சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பதோ, டிடிவி தினகரன் சந்திப்பதோ நடைபெறாமல் இருந்த நிலையில் வைத்திலிங்கம் அதற்கான பணியை மேற்கொண்டுள்ளார். ஜூன் 7ஆம் தேதி திட்டமிட்டபடி வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் மூவரும் இணைந்து மேடையேறிவிட்டால் அதிமுகவின் தென் மண்டலத்தில் மேலும் பெரிய ஓட்டை விழும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் மாஜி அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
அதிமுகவில் யார் ஆதிக்கம்?ஓபிஎஸ், சசிகலா, தினகரன் சென்றதால் முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிராக அதிமுக உள்ளது என்பது போன்ற தோற்றம் தொண்டர்கள் மத்தியில் உருவானது. இதனால் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக கவுண்டர் சமூகத்தவர்களே இருப்பதால் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான தொண்டர்கள், கீழ் மட்ட நிர்வாகிகள் தினகரனின் அமமுகவில் சென்று சேர்ந்தனர்.
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியா?அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசம் தான் என்றான பின்னரே பலரும் அமமுக பக்கம் போவதை நிறுத்திக் கொண்டனர். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மீண்டும் இணைந்தால் அதிருப்தியில் இருப்பவர்கள், ஊசலாட்டத்தில் இருப்பவர்கள் பாதை மாறத் தொடங்கிவிடுவர். பெரிய எண்ணிக்கையில் அதிமுகவிலிருந்து அமமுக பக்கம் தொண்டர்கள் சென்றால் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி என்று செய்திகள் பரவும்.
டெல்லி போடும் ஆர்டர்!அதிமுக தொண்டர்கள் அதிருப்தி என்றொரு தகவல் டெல்லியின் காதில் எட்டினால் மீண்டும் கட்சியில் அவர்களை இணைத்துக் கொள்ளுங்கள், கூட்டணியில் இணைத்துக் கொள்ளுங்கள் என பேசத் தொடங்குவார்கள் என எடப்பாடி நினைக்கிறாராம். இதனால் தென் மண்டல மாஜி அமைச்சர்களை ஜூன் 7 திருமண விழாவை கவனிக்குமாறும், தங்களது பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதை மாறிவிடக்கூடாது அவ்வாறு மாறினால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
சாட்டையை சுழற்றும் எடப்பாடிஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியாகாமல் உள்ளது. அது வெளிவரும் வரை அடக்கிவாசிக்க வேண்டும். அதன் பின்னர் ஜெயலலிதா பாணியில் தனக்கு எதிரான மனநிலையில் கட்சியில் உள்ளவர்கள் மீது சாட்டையை சுழற்ற வேண்டும் என எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம்.