மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டின் பேரில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி போலீஸார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.
அதைத்தொடர்ந்து, டெல்லியின் ஜந்தர் மந்தர், இந்திய கேட் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்படாது என்று டெல்லி போலீஸ் அறிவித்தது. பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸின் விசாரணை முடியும்வரை காத்திருக்குமாறு மல்யுத்த வீராங்கனைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் தனது அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக அலுவலக தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அமித் ஷாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 2 மணிநேரம் நடந்ததாகக் கூறப்படும் இந்த சந்திப்பில், பிரிஜ் பூஷன் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தி கூடிய சீக்கிரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும், அவரைக் கைதுசெய்யுமாறும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அமித் ஷா தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இன்றைக்குள் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அல்லது அமித் ஷா தரப்பிலிருந்து இந்த சந்திப்பு குறித்த கருத்துக்கள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.