'துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது' – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

வின்ட்ஹோக்,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

முன்னதாக நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலையும், ஆறுதலையும் வழங்கியதாக தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது;-

“இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோரமான ரெயில் விபத்து சம்பவம் நிகழ்ந்த நிலையில், நமீபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்கள் அனுதாபத்தையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினர்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களிடம் இருந்து எனக்கும், பிரதமர் மோடிக்கும் பல குறுஞ்செய்திகள் வந்தன. இது உலகமயமாக்கலுக்கும், உலகம் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்துள்ளது என்பதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நின்றன” என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.