பெங்களூர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 294 பேர் இறந்த நிலையில் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் உறைய வைத்துள்ள இந்த ரயில் விபத்துக்கு மசூதி தான் காரணம் என்ற வகையில் சர்ச்சையாக பதிவிட்ட பாஜக பெண் நிர்வாகியால் சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ரயில் நேற்று முன்தினம் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.
இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.
இந்த ரயில் பெட்டிகள் பக்கத்தில் உள்ள டிராக்கில் விழுந்த நிலையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது. இந்த ரயில் விபத்தில் 294 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ரயில் விபத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார். இதுமட்டுமின்றி ரயிலில் மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தண்டவாளத்தை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் ரயில் விபத்துக்கு மதசாயம் பூச சிலர் முயன்று வருகின்றனர். இதுதொடர்பான கருத்துகளை அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனை கவனித்த ஒடிசா மாநில அரசு, ‛‛ரயில் விபத்துக்கு மதசாயம் பூசும் வகையில் செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா என்பது மதசார்பற்ற நாடு. தற்போதைய ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது” என எச்சரித்துள்ளது. மேலும் மதசாயம் பூசும் வகையில் கருத்துகள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஒடிசா அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் தான் ஒடிசா ரயில் விபத்து குறித்து கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிர்வாகியின் பெயர் சகுந்தலா. இவர் துமகூரு மாவட்டம் குப்பி தாலுாக ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவர் ரயில் விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அதனை அம்புக்குறியிட்டு காட்டி ரயில் விபத்துக்கு காரணம் மசூதி எனும் வகையில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த பதிவு ஒடிசா போலீசாரின் கவனத்துக்கும் சென்றது. இந்நிலையில் தான் சம்பவம் குறித்து ஒடிசா போலீசார் கர்நாடகா போலீசாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த விஷயத்தில் விரைவில் சகுந்தலா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.