புவனேஸ்வர்: நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் அம்மாநிலத்தில் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பர்கர் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட ஆலைக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திங்கள் கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்த விளக்கம் அளித்துள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே,” பர்கர் மாவட்டத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த வழித்தடத்தின் பராமரிப்பு அனைத்தும் அந்த தனியார் நிறுவனத்தால் பராமக்கப்படுகிறது. இதற்கும் கிழக்கு கடற்கரை ரயில்வேக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய விபத்து: முன்னதாக ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. அப்போது, எதிர்திசையில் வந்த பெங்களூரூ–ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மீட்கப்பட்ட சில சடலங்கள் 2 முறை கணக்கிடப்பட்டதால், எண்ணிக்கையில் தவறு நடந்துள்ளது. ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா நேற்று தெரிவித்தார்.