அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஒருவழியாக டேக் ஆப் ஆகப்போகிறது. இம்மாதம் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார்கள்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை:
லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கும் படத்தின் பெயர் ‘விடா முயற்சி.’ சென்ற மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே அஜித் கதையைக் கேட்டு, சில திருத்தங்கள் சொல்லியிருப்பதால், மகிழ் அதற்கான வேலைகளில் உள்ளார், அதனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது என்றும் செய்திகள் வந்தன. இந்நிலையில் புனேயில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும், அங்கே அரங்கம் அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தக் கதையில் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். மெயின் வில்லனாக பக்கத்து மாநிலத்திலிருந்து ஒருவர் வரவிருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு விஷயம், அஜித்தும், இயக்குநர் மகிழும் இப்போது படத்தின் முன் திட்டமிடல் வேலைகளுக்காக லண்டனில் உள்ளனர் என்றும் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் லண்டனில் பைக் ரைடில் இருந்த அஜித், அங்கே லுக் டெஸ்ட் எடுத்தார் என்பதைச் சொல்லியிருந்தோம்.
‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது என்றும், இம்மாதம் இரண்டாவது வாரங்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸைக்கூட அனேகமாக வரும் பொங்கல் பண்டிகைக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ படங்கள் பொங்கலுக்கு வரும் ஐடியாவில் இருப்பதனால் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாகப் படத்தைக் கொண்டு வருகின்றனர்.