நாடு முழுவதும் இப்போது மாம்பழ சீஸன் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும் அதிக அளவில் மாம்பழ விளைச்சல் இருக்கிறது. மகாராஷ்டிராவில் அல்போன்சா மாம்பழம் மிகவும் பிரபலமாகும். குஜராத்தில் கேசர் எனப்படும் மாம்பழம் மிகவும் பிரபலமாகும். குஜராத் மாநிலம் நவ்சாரி அருகில் உள்ள அதான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ்பாய் நாயக். இவர் டெக்ஸ்டைல் இன்ஜினியர் ஆவார். இவரது வீடு 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான நிலத்தில் இருக்கிறது. வீடு கட்டியது போக எஞ்சிய நிலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்துவிட்டு அதில் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.
விவசாயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட முகேஷ்பாய் நாடு முழுவதும் கிடைக்கக்கூடிய மாம்பழ ரகங்களின் செடிகளை கொண்டு வந்து தனது வீட்டை சுற்றி நட்டார். அதோடு பாகிஸ்தானில் பிரபலமான ஹஸ்னரா, இஸ்ரேலின் மாயா, கருப்பு அல்போன்சா, மல்கோவா, கேசர், நீலம் போன்ற 21 வகையான மாமரங்களின் கன்றுகளை கொண்டு வந்து நட்டு மரங்களாக வளர்த்து அசத்தி இருக்கிறார்.
இப்போது அனைத்து மரங்களும் 10 முதல் 12 வருடங்களை கடந்துவிட்டது. வெளிநாட்டு ரகங்களையும், உள்நாட்டு ரகங்களையும் ஒரே இடத்தில் வளர்த்து மகசூல் எடுத்திருப்பதை கண்டு வேளாண் விஞ்ஞானிகளே ஆச்சரியம் அடைந்துள்ளனர். இம்மரங்களில் விளைந்த மாம்பழங்களை தனது நண்பர்களுக்கும் விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக முகேஷ்பாய் கூறுகையில், “2000 கிலோ மாம்பழம் விளைந்திருக்கிறது. இப்பழங்களை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் மற்றும் எனது நண்பர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் பெற்று விற்பனை செய்துள்ளேன். இருக்கும் மாம்பழங்களில் இஸ்ரேலின் மாயா மாம்பழம்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது. சொன்பாரி மாம்பழங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது.
20 கிலோ சொன்பாரி மாம்பழத்தை 3 ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். இம்மாம்பழங்கள் விற்பனை மூலம் இந்த ஆண்டில் இது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்துள்ளேன். பொழுதுபோக்காக ஆரம்பித்தது. இன்றைக்கு லட்சக்கணக்கில் வருவாய் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது” என்றார்.
2010-ம் ஆண்டு நவ்சாரி வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மாம்பழத் திருவிழாவில் முகேஷ்பாய் தனது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த அல்போன்சா மாம்பழங்களை பார்வைக்கு வைத்திருந்தார்.
இந்த விழாவில் முகேஷ்பாயின் அல்போன்சா மாம்பழத்திற்கு மாம்பழங்களின் அரசன் விருது கிடைத்தது. தனது வீட்டுத்தோட்டத்தில் மாமரங்கள் மட்டுமல்லாது காய்கறிகள் மற்றும் இதர பழமரங்களையும் நட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் விவசாய தொழில் நுட்பத்தில் முன்னிலையில் இருக்கும் இஸ்ரேல் சென்று வந்துள்ளனர். இஸ்ரேலில் மாமரங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாயிகள் கற்றுக்கொண்டு வந்துள்ளனர். அந்த தொழில் நுட்பத்தை குஜராத் விவசாயிகள் பயன்படுத்தி கேசர் மாம்பழ உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
சொட்டு நீர் பயன்பாடு, கருவி மூலம் நீர் ஆவியாதலை கண்டுபிடித்து அதற்கு தக்கபடி மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பழங்களை பேக்கிங் செய்தல் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை இஸ்ரேல் நாட்டில் குஜராத் விவசாயிகள் கற்றுத்தேர்ந்துள்ளனர். இஸ்ரேலில் 20 சதவிகித நிலம் மட்டும்தான் விவசாயத்திற்கு சாதகமாக இருக்கிறது. அப்படி இருந்தும் விவசாய தொழில் நுட்பத்தில் இஸ்ரேல் முன்னிலையில் இருக்கிறது.