தமிழகத்தில் மொத்தம் 5359 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனிடையே டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் 500 மதுகடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் 500 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய மதுபான கடைகள், குறைந்த வருவாய் உள்ள கடைகள், பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.