ரயில் விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்ட.. இன்டர்லாக்கிங் என்றால் என்ன? எப்படி இயங்கும் தெரியுமா?

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகினர். இதில், எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அவர் கூறிய இன்டர்லாக்கிங் என்றால் என்ன அது எப்படி செயல்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது விபத்திற்குள்ளாகியது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்திற்கு மூல காரணமும், அதற்கு காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் எனவும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் ரெயில்வே சிக்னல் அமைப்பில் முக்கிய கருவியாக இருக்கும் எலக்ட்ரிக் பாயின்ட் எந்திரத்தின் அமைப்பு மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். ரயில்வே அமைச்சர் கூறிய இன்டர்லாக்கிங் என்றால் என்ன என்று இங்கு பார்ப்போம.

இண்டர்லாக்கிங் என்றால் என்ன?: இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது, ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள், உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் பாயிண்ட் இயந்திரங்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒட்டுமொத்த கட்டமைப்புகளையே இன்டர்லாக்கிங் என்று சொல்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர். உலகம் முழுவதும் ரயில்வே அமைப்புகள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே ரயில்களை இயக்குகின்றன. ரயிலானது ஒரு குறிப்பிட்ட லைனில் செல்லும் போது அந்த லைனில் வேறு ரயில் எதுவும் இல்லை என்பதை இந்த இண்டர்லாக்கிங் மூலமே உறுதி செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக சொல்வது என்றால் ரயில்வே கேட்டை பூட்டிவிட்டு இம்டர்லாக்கிங் கட்டமைப்புடன் இணைத்து விட்டால் கேட் கீப்பர் நினைத்தால் கூட அந்த ரயில்வே கேட் திறக்க முடியாது. ரயில் குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்ற பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த லாக் திறக்கப்படும் அதன்பிறகு மட்டுமே கேட் கீப்பரால் ரயில்வே கேட்டை திறந்து விட முடியும்.

எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது: அதே போல, இணைப்பு தண்டவாளத்தில் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தால் அங்குள்ள பாயிண்ட் மூலம் இணைப்பு தண்டவாளம் லாக் செய்யப்படும். அதன்பிறகு வேறு எந்த ரயிலும் இணைப்பு தண்டவாளத்திற்குள் செல்ல சிக்னல் கிடைக்காது. ஒடிசா விபத்தை பொறுத்தவரை இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது.

ஆனால், அங்குள்ள பாயிண்ட் இயந்திரத்தில் ஏற்பட்டிருந்த மாற்றமே இந்த ரயில் விபத்துக்கு காரணமாக ஆரம்ப கட்ட தகவலின் படி சொல்லப்படுகிறது. ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பில் இத்தகைய மாற்றம் செய்வது ”வேண்டுமென்றே” மட்டுமே இருக்கும் என்று கூட பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்து உள்ளது. நாசவேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்ட நிலையில், ரயில்வே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.