சென்னை: இளையராஜா, மணிரத்னம் இருவருமே இந்திய திரையுலகின் மிகப் பெரிய ஆளுமைகளாக உள்ளனர்.
மணிரத்னம் தனது ஆரம்ப காலங்களில் இளையராஜாவுடன் தான் பயணித்து வந்தார்.
ஆனால், 1991ம் ஆண்டு வெளியான தளபதி படத்திற்குப் பின்னர் இந்தக் கூட்டணி பிரிந்தது.
இந்நிலையில், மணிரத்னத்துக்கு உதவியது குறித்து பேட்டியொன்றில் இளையராஜா பேசியது வைரலாகி வருகிறது.
மணிரத்னம் வளர்ச்சிக்கு உதவிய இளையராஜா: 1983ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். இயக்குநர் பாலுமகேந்திரா தயாரித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். மணிரத்னம் இயக்கிய முதல் படத்திற்கே இளையராஜா இசையமைத்துக் கொடுத்தார். அதுவும் சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார் இளையராஜா.
இதனை அவரே சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேபோல், மணிரத்னத்துக்கு அவர் உதவியது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் இளையராஜா. பல்லவி அனு பல்லவி படத்திற்காக முதன்முதலில் இளையராஜாவை சந்திக்கச் சென்றுள்ளார் மணிரத்னம். அப்போது ராஜாவை பார்த்து நெகிழ்ச்சியான மணிரத்னம், “நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை” என்று கூறினாராம்.
அதன்பிறகு மலையாளத்தில் ‘உனரூ’ என ஒரு படம் இயக்கியுள்ளார் மணிரத்னம். அதற்கும் பட்ஜெட் பிரச்சினை இருந்ததால் மணிரத்னத்துக்காக குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு இசையமைத்தாராம் ராஜா. அதுமட்டுமில்லாமல் மணிரத்னத்தை பல தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தியது பற்றியும் இளையராஜா கூறியுள்ளார். சில நேரங்களில் மணிரத்னத்துக்கே தெரியாமல் தயாரிப்பாளர்களிடம் பேசி அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததாராம்.
ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் மணிரத்னம் எங்கும் பேசியதில்லை. அதனை நான் பெரிய குறையாகவும் பார்க்கவில்லை என இளையராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் கேரக்டர் குறித்து அடிக்கடி சர்ச்சையான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவரோ மற்றவர்களுக்கு உதவி செய்தே வாழ்ந்ததாக பலரும் கூறி வருகின்றனர். அதேபோல், இளையராஜாவும் மணிரத்னமும் பிரிய இயக்குநர் கே பாலச்சந்தர் தான் கரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1992ல் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா படத்தை இயக்குநர் கே பாலச்சந்தர் தான் தயாரித்தார். அப்போது கே பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைக் கிடையாது. அதனால் அவர்தான் ரோஜா படத்திற்கு இளையராஜாவுக்கு பதிலாக ஏஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியதாக மணிரத்னம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.