தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவி தற்கொலை | மதுக்கடைகளை மூட அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: “தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டுமெனக் கோரி மாணவி தற்கொலை கொண்டுள்ளார். இப்பிரச்சினைக்கு மதுவிலக்கு ஒன்றே தீர்வு” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 16 வயது சிறுமி 10-ஆம் வகுப்பில் 410 மதிப்பெண் பெற்றவர். இவர், தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 04.06.2023 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்வார்கள் அப்படி சொல்லிவிட்டு, தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தி வருவது ஏற்புடையதல்ல.

மதுவால் மது அருந்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்பது மாணவியின் மரணத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வதுதான் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சமூகப் போக்கும் கவலை கொள்ள வைத்துள்ளது. உலகமய நுகர்வியப் பண்பாட்டின் விளைவாலும், பொருளியல் அழுத்தங்களாலும் சிதைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் விரிசலை ஏற்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை உதிரிகளாகக் கட்டமைத்தது.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பேசி, ஒன்று கூடி வாழ்ந்த வாழ்க்கை முறை மாற்றி, அனைவரும் தனித்து விடப்பட்ட நிலையில், எளிமையான சிக்கல்களுக்குக் கூட, மதுவையும், அதன் உச்சமாகத் தற்கொலையையும் தீர்வாக மக்கள் நாடுகின்றனர். உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி அழித்ததன் காரணமாக வந்தத் தொகை. மதுவுக்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடும்பங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததன் மூலம் கிடைத்த தொகையால்தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டிய தருணம் இது.

வரி என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசு கொள்ளை அடித்து செல்லும் பெரும் தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்டாலே, அதில் மது வருமானத்தை விட கூடுதலாக ஈட்டமுடியும். தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள் (ஆவின் நிறுவனம்) விற்பனையை தமிழ்நாடு அரசு விரிவாக்கினால் ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். எனவே, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை கேட்டுப் பெற்று, வருவாய் இழப்பில்லாமல் மதுபானக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

குறிப்பாக, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் முழு மதுவிலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான், பல மாணவிகளின் தற்கொலையை நாம் தடுக்க விட முடியும். தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தக் கோரி, கடிதம் எழுதி விட்டு தன்னுயிரிந்த மாணவிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.