சென்னை: ஆடம்பர வாழ்க்கைக்காக பொய்க்கு மேல் பொய் சொன்ன தம்பதி – சிக்கிய பகீர் பின்னணி?

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த லலிதா என்பவர் மேடவாக்கம் பகுதியில்  லீசுக்கு (வாடகை ஒப்பந்தம்) வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது மளிகை கடைக்காரர் நாகராஜ் என்பவர் மூலம் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் லலிதாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

அப்போது, சங்கர், மேடவாக்கம் சூர்யா நகரிலுள்ள தன்னுடைய வீட்டை 13 லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு கொடுப்பதாக லலிதாவிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து வீட்டை சுற்றிப் பார்த்த லலிதா, அட்வான்ஸாகக் கடந்த 21.11.2022-ம் தேதி ஒரு லட்சம் ரூபாயை  சங்கரின் கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார். அதன்பிறகு மீதமுள்ள 12 லட்சம் ரூபாயையும் சங்கரின் வங்கி கணக்கிற்கு லலிதா அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், வீட்டை லீசுக்கு கொடுக்காமல் சங்கர் லலிதாவை ஏமாற்றி வந்திருக்கிறார். இதையடுத்து சங்கரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பிறகே லலிதா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். 

நளினி

மடிப்பாக்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கு லலிதா சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் லலிதா விசாரித்தபோது சங்கர், லீசுக்கு வீடு கொடுப்பதாகக் கூறி சிலரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து லலிதா, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.லலிதாவைத் தொடர்ந்து இன்னும் சிலர் சங்கர் மீது மோசடி புகார்களைக் கொடுத்தனர்.

சங்கர் மீது தொடர்ந்து மோசடி புகார்கள் குவிந்ததால் மடிப்பாக்கம் போலீஸார் சங்கரின் பின்னணியை விசாரித்தனர். விசாரணையில் சங்கர், வேறு ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து அதை 3 லட்சம் ரூபாய் தொடங்கி 15 லட்சம் ரூபாய் வரை லீசுக்கு கொடுப்பதாகவும் புதிய வீடு கட்டித்தருவதாகக் கூறியும் சென்னையில் பத்துக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அதனால் இந்த வழக்கு சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில் சென்னை மடிப்பாக்கத்தில் யோகா பயிற்சியாளராக பணியாற்றிய லதா என்பவரிடம் புதிய வீடு விற்பதாகக் கூறி 35 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக சங்கர் மீதும் அவரின் மனைவி நளினி மீதும் மத்திய குற்றப்பிரிவுக்கு சில மாதங்களுக்கு முன்பு புகார் வந்தது.

அதனஅடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சங்கரையும் அவரின் மனைவி நளினியையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஒரு பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். சங்கரின் செல்போன் ஆன் செய்யப்பட்டதும் பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து அழைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

சங்கர்

இது குறித்து மத்திய குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் பேசினோம். “சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த சங்கர், சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இவரின் மனைவி நளினி டிகிரி படித்துவிட்டு யோகா பயிற்சியாளராகவும், கலை நிகழ்ச்சிகளில் பாடகராவும் இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சாய்சரண், வெளிநாட்டில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

சங்கர், மடிப்பாக்கத்தில் கட்டுமான நிறுவனத்துக்கான ஆபீஸ் ஒன்றையும் வைத்திருந்தார். அப்போது புல்லட் பைக்கில் மைனர் போல அந்த ஏரியாவில் வலம் வந்திருக்கிறார். அதோடு மாதம் 25,000 ரூபாய் வாடகையில் குடும்பத்தினரோடு குடியிருந்திருக்கிறார். கார், சொகுசு வாழ்க்கை என ஆடம்பரமாக வாழ்ந்த சங்கருக்கு திடீரென பிசினஸில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. போதிய வருமானம் இல்லாததால் புல்லட், காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார் சங்கர். அதனால் காரையும் புல்லட்டையும் கடன் கொடுத்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். 25,000 ரூபாய் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு 5,000 வாடகைக்கு சென்றிருக்கிறது சங்கரின் குடும்பம்.

ஆடம்பரமாக வாழ்ந்த காலக்கட்டத்தில் சங்கர், சிலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததும் சங்கர், வீடுகளை வாடகைக்கு எடுத்து அதை தன்னுடைய வீடு என பொய் சொல்லி பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு லீசுக்கு கொடுத்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கடனையும் வீட்டின் ஓனர்களுக்கு சில மாதங்கள் வாடகையையும் கொடுத்து வந்திருக்கிறார். வாடகை பணத்தை சங்கர் சரியாக கொடுக்காததால் வீட்டின் ஓனர்கள், வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் லீசுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு சங்கர் வீட்டின் ஓனர் இல்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்ததும் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் சென்னை ராம்நகரில் 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி விற்பதாகக் கூறி சங்கர், தன்னுடைய மனைவியின் தோழியான யோகா பயிற்சியாளர் லதாவிடம் 35 லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார்.

ஆனால் வீடு கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றியதால் லதா கொடுத்த புகாரில் தற்போது சங்கரும் நளினியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் கூட இல்லை. அவ்வளவு பணத்தையும் எப்படி செலவழித்தார்கள் என விசாரிக்க இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவிருக்கிறோம்” என்றார்.

வீடு

மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் இருந்த சங்கரும் அவரின் மனைவியும் பொய்க்கு மேல் பொய்களை அளந்து விட்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன்னுடைய மகனுக்கு சம்பளம் வரட்டும், எல்லா கடனையும் அடைத்து விடுகிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

லீசுக்கு பணத்தை வாங்கி ஏமாற்றிய வழக்கில் சிறைக்குச் சென்ற சங்கர், ஜாமீனில் வந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி இருக்கிறார்.அதனால் சங்கரிடம் பணத்தை இழந்தவர்களும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் தேடி வந்த சூழலில்தான் புதிதாக  ஒருவரிடம் வீடு லீசுக்கு கொடுக்க போனில் சங்கர் பேசிய போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் போலீஸார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.