பெங்களூரு: Abishek Marriage (அபிஷேக் திருமணம்) கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
ரஜினிகாந்த்துக்கு தமிழ் திரையுலகம் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படி அவருக்கு கன்னட திரையுலகத்தில் ராஜ்குமார், சிவராஜ்குமார், அம்பரீஷ் உள்ளிட்டோரும் நெருங்கிய நண்பர்கள்.
அம்பரீஷ்: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவர் 1972ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல நூறு படங்களில் நடித்தவர் அரசியலில் எண்ட்ரி ஆனார். அதன்படி அவர் மக்களவை உறுப்பினராகவும், கர்நாடக் மாநிலத்தின் அமைச்சராகவும் திகழ்ந்தார். அம்பரீஷ் கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு சுமலதா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் இருக்கிறார்கள். சுமலதா இப்போது மண்டியா தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக்: அம்பரீஷ் மகனான அபிஷேக்கும் நடிகர் ஆவார். இவர் அமர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இவருக்கும் மாடல் அழகி அவிவா பிடப்பாவுக்கும் பெங்களூரில் இருக்கும் பேலஸ் கிரவுண்ட்ஸில் திருமணம் நடந்தது. மிக பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் கன்னட திரையுலகத்தின் தற்போதைய சென்சேஷனல் ஹீரோவான யஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் ரஜினிகாந்த்: அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த்தும் இன்று அபிஷேக்கின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினார். ரஜினிகாந்த் தவிர நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவியான அஸ்வினியும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு நிகழ்ச்சி: சுமலதா அரசியல் பிரமுகர் என்பதால் தனது மகனின் திருமண வரவேற்பை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார். இன்று நடைபெற்ற திருமணத்தில் 1000 பேர் கலந்துகொண்ட சூழலில் ஜூன் 7ஆம் தேதி நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கூடுதலாக கலந்துகொள்வார்கள் என சுமலதா தரப்பு எதிர்பார்க்கிறது. முன்னதாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை சுமலதா வழங்கியிருந்தார். எனவே பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.