பெரம்பலூர் சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்பலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பலியான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம், எளம்பலூர் கிராமம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை (ஜூன் 5) அதிகாலை திண்டுக்கல் சென்றுகொண்டிருந்த வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தும்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையின் இடதுபுறம் விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி காயம் ஏற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், 108 ஆம்புலன்ஸ் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த இரு நபர்களான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி (60), பெரம்பலூர் வட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ராஜேந்திரன் (45) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிப்பிரியா ( 22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நீலா( 65), ராமநாதபுரம், பொந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த கிழவன் ( 45), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (42), ராமநாதபுரம், பொந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (40) மற்றும் ராமநாதபுரம், பொந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சாமிதாஸ் (40) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்,
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.