வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரபு, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் தினமும் வீட்டில் சண்டை போட்டதால் மனைவி, பிள்ளைகள் அனைவரும் நிம்மதியை இழந்திருக்கின்றனர். இதனால் வேதனை அடைந்த அவரின் மகள் விஷ்ணுபிரியா (16) தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்ணுபிரியா 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அடுத்து மேல்நிலைப்பள்ளி படிப்புக்குத் தயாராகி வந்த நிலையில், தந்தையின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு துயர முடிவை எடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், `விஷ்ணுபிரியாவின் புகைப்படத்தை மதுபாட்டில்களில் ஒட்ட வேண்டும்’ என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்திலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் மதுவால் தினம் தினம் சீரழிந்து வருகின்றன.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசோ தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து இளைய சமுதாயத்தின் பாதையை மாற்றி அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது. மேலும், சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில்மீதும் ரூ.10 கூடுதலாக விற்பது குறித்தும், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களைப் பார்த்து `நீங்கள் குடிக்கிறீர்களா?’ என தமிழக அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.