டெல்லி: ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாட்டையே அதிர வைத்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து இப்போது போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை நடந்த கொடூரமான ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது. 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.
மொத்தம் 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இதில் 270 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் இன்னுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மாபெரும் ரயில் விபத்திற்கு உலகெங்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் ரயில்வே துறை அல்லது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இருப்பினும் இன்டர்லாங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்குப் பின்னரே உண்மை தெரிய வரும்.
அதாவது, கோரமண்டல் ரயில் பாலசோர் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது, அந்த ரயிலுக்குப் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அது மெயின் லைனை விட்டுவிட்டு லூப் லைனில் சென்றுள்ளது. அங்கே சரக்கு ரயில் இருந்த நிலையில், அதின் பின்புறம் கோரமண்டல் ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் தான் மொத்தம் ஏசி பெட்டிகள் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்து சுமார் 7 மணியளவில் நடந்துள்ளது. அதில் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இப்போது சில நிமிடங்கள் கழித்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் அதில் மோதியுள்ளது. இந்த விபத்து சுமார் 7.20 மணியளவில் நடந்துள்ளது. முதல் விபத்து நடந்து 20 நிமிடங்களுக்கு பின்னரும் விபத்து குறித்து ஹவுரா ரயில் ஒட்டுநருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியதே இதை மோசமான விபத்தாக மாற்றியுள்ளது. சிக்னல் அமைப்பில் இடையூறு ஏற்பட்டு அதன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே விபத்து குறித்து இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக பாலசோர் ரயில்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு), அலட்சியத்தால் மரணங்கள் ஏற்படுத்தும் ஐபிசி 34 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பயணிகள் உயிரை ஆபத்தில் தள்ளும் குற்றத்திற்கான ரயில்வே சட்டத்தின் 153, 154 & 175 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ரயில்வே இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், அதன் பின்னர் சிபிஐ வழக்கை விசாரிப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இந்தச் சூழலில் தான் பாலசோர் ரயில்வே காவல் நிலையம் இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த ரயில் விபத்து விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இது அரசியல் செய்யும் நேரமில்லை என்று கூறி ராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.