ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து 51 மணி நேரம் கழித்து, தெற்கு நோக்கிய தடத்தில் முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாஹநஹாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, இருபது ஆண்டுகளில் இல்லாத கோர ரயில் விபத்து…. அடுத்தடுத்து இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கி சரிந்த பெட்டிகளில் மனிதர்கள் சிக்கித் தவித்தனர். 275 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முதல் நாளில் முழு கவனமும் மீட்பு நடவடிக்கையில் செலுத்தப்பட்டது.
மீட்பு பணிகள் முடிவடைந்ததும், போர்க்கால அடிப்படையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கி இரவு பகலாக, இடைநிற்றலின்றி நடைபெற்றன. பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இருந்தும் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திரங்கள், விபத்து நடைபெற்ற பஹானகாவில் குவிக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய மெயின் வழித்தடங்களும், விபத்தில் சேதமடைந்த லூப் லைனும் சீரமைக்கப்பட்டன.
51 மணி நேர சீரமைப்பு பணிகளுக்குப் பின், தெற்கு நோக்கிய, அதாவது சென்னை நோக்கிய Down Line வழித்தடத்தில், சரக்கு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. விபத்துக்குப் பின் முதன்முறையாக சரக்கு ரயில் போக்குவரத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
அப்போது, சரக்கு ரயில், ஹாரன் ஒலித்தபடி, தனது பயணத்தை தொடங்கியபோது, கையெடுத்து கும்பிட்டு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இறைவனை பிரார்த்தனை செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், Up Line எனப்படும் வடக்கு நோக்கிய மெயின் வழித்தடத்திலும், தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை முழுவீச்சில் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றே பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது. 60 மணி நேர தண்டவாள சீரமைப்பு பணிகளுக்குப் பின், குறைந்த வேகத்தில், பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என்று தெரிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் மாநிலம் ஹவுரா சாலிமருக்கு இன்று காலை 7 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மூன்றே முக்கால் மணி நேரம் தாமதமாக, காலை 10.45 மணிக்குப் புறப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.