கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை பராமரிப்பு காரணமாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் 1 மணியளவில் அணையில் இருந்து விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் 50.65 அடி இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறும்போது, “கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.65 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், தருமபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.