புதுடில்லி, விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதை அடுத்து, நியாயமான விலையில் விமான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உலக அளவில், பயணியர் விமான போக்குவரத்து சேவையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின், உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும், ஒரு கோடியே 28 லட்சத்து 88 ஆயிரம் பயணியர் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர். ஒருபுறம் உள்நாட்டு விமான போக்குவரத்து குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வந்தாலும், ‘கோ பர்ஸ்ட்’ என்ற விமான சேவை நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
அதன் காரணமாக, கடந்த 3ம் தேதி முதல், அந்நிறுவனம் தங்கள் விமான போக்குவரத்து சேவையை நிறுத்திக் கொண்டது.
அந்த விமான நிறுவனம் சேவை அளித்து வந்த உள்நாட்டு வழித்தடத்தில், மற்ற நிறுவனங்கள் சேவையை துவங்கின.
ஆனால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது மட்டுமின்றி, பல்வேறு உள்நாட்டு வழித்தடங்களிலும் விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. இவை, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பயணியர் விமான டிக்கெட் விலை உயர்வு குறித்து, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மார்ச் 16ல் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
விமான டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிப்பதில் சர்வதேச அளவில் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே நடைமுறைகளை தான் நம் விமான சேவை நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன.
டிக்கெட் விலையை அரசு கட்டுப்படுத்துவதில்லை. சந்தை நிலவரம், பயணியரின் தேவை, ‘சீசன்’ மற்றும் சந்தையின் அப்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
குறைந்த கட்டண டிக்கெட்டுகளின் முன்பதிவு விரைவில் விற்று தீர்ந்தால், மீதமுள்ள டிக்கெட்டுகளுக்கு கடும் போட்டி நிலவும். அப்போது, அந்த டிக்கெட் விலைகளை விமான சேவை நிறுவனங்கள் போட்டி போட்டு உயர்த்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில தினங்களாக, விமான டிக்கெட் கட்டண உயர்வு மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருவதை அடுத்து, விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுடன் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, விமான கட்டண உயர்வு குறித்த தன் கவலையை அவர் வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, ‘கோ பர்ஸ்ட்’ நிறுவனம் சேவை அளித்து வந்த வழித்தடத்தில், விமான கட்டணங்களை நிர்ணயிப்பதில் தனி கவனம் செலுத்துப்படி நிறுவனங்களை அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்துக்கு பின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
பயணியர் விமான டிக்கெட்டுகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அதை, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக, பேரிடர் காலங்களில் விமான டிக்கெட் விலை கட்டுக்குள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஒடிசா ரயில் விபத்து போன்ற தேசிய அளவிலான சோக நிகழ்வுகளின் போது, உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்து வர, விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்காமல் இலவச சேவை அளிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்