வாஷிங்டன்: ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம் செயல்படுகிறது. இதை அங்கு செல்பவர்கள் நேரில் உணர முடியும்,” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், இந்த பயணம் தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:
இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது. அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இதை நீங்கள் நேரில் பார்த்து உணர முடியும். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ஜனநாயக அமைப்புகளின் பலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த பேச்சு, விவாதத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
மோடியின் இந்த வருகை வாயிலாக, இந்தியா – அமெரிக்கா இடையில் தற்போது இருக்கும் உறவை முன்னெடுத்து செல்வது மட்டுமின்றி, இரு நாடுகளும் ஆழமான, வலுவான நட்பை நோக்கி செல்லும் என்பதையும் எங்களால் உறுதியாக கூற முடியும்.
இந்த விவகாரங்கள் அனைத்தையும் பேசுவதற்கும், நட்புறவை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடியின் வருகை பெரிதும் உதவும் என, அதிபர் ஜோ பைடன் நம்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement