சென்னை: சென்னையில் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய்த் துறை மீட்டு சீல் வைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், ‘விவசாய தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார்.
அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை மீட்ட தமிழக அரசு, அந்த இடத்தில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சொந்தம் கொண்டாடினார். தற்போது அந்த நிலமும் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கர் இருந்தது. கடந்த 1910-ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்துக்காக தமிழக அரசு இந்த இடத்தை வழங்கியது. காலப்போக்கில் தோட்டக்கலை சங்கம் தனிநபர் வசம் சென்று, அந்த நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் சென்றுவிட்டது.
இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, 1989-ம் ஆண்டு 17 ஏக்கர் நிலத்தை சட்டப்படி மீட்டெடுத்தார். அதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட இடத்தில் 2009-ம் ஆண்டு செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டது. மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்ற தனிநபர் பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் சட்டப் போராட்டத்தால், மீதமுள்ள 5 ஏக்கர் 18 கிரவுண்ட் 1,683 சதுரஅடி நிலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நில நிர்வாக ஆணையரால் விசாரிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, அந்த இடம் அரசால் மீட்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் முழுவதுமாக கையகப்படுத்தப்பட்டு சீல் வைக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் வாதாடிய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி.யும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.