நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் ரேடியோ செட் கடை நடத்தி வந்தவர் சுப்பிரமணி (70). இவர், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவருடைய மகன்கள் அதே பகுதியில் அருகில் வசித்து வரும் நிலையில், தனியே வசித்து வந்த இவர், ரேடியோ செட் கடையிலேயே தனியாக வசித்து வந்திருக்கிறார். ரேடியோ செட் தொழிலில் வேலை இல்லாத நாள்களில், இவர் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடுவதை மாற்றுத்தொழிலாக வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு மர்ம நபர்களால் இவர் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கடை உள்ளே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

குற்றவாளிகளை அடையாளம் காண மோப்பநாய் ஸ்டெபி சம்பவ இடத்துக்கு வரவழைகப்பட்டு தேடுதல் நடைபெற்றது. ஆனாலும், அந்த மோப்ப நாய் குறிப்பிட்ட தூரம் சென்று நின்றுவிட்டது. இதற்கிடையில், ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை திரட்டினர். இந்நிலையில் கொலை செய்த மர்ம நபர்கள் யார் என அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகிறது. சொத்து பிரச்னையில் கொலை நடந்ததா அல்லது இந்த கொலையின் பின்னணியாக வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.