விழுப்புரம்: ஆதி திராவிடர் சமூகத்தினர் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விழுப்புரம் மேல் பாதி திரவுபதி அம்மன் கோவிலை இழுத்து மூடி அரசு அதிகாரிகள் இன்று காலையில் அதிரடியாக சீல் வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 8-ந் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் வழிபட வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் மற்றொரு சமூகப் பிரிவினரால் தாக்கப்பட்டார். அதைத் தடுக்க முயற்சித்த கந்தன், கற்பகம் ஆகியோரும் தாக்கப்பட்டனர். அது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இப் பிரச்சினையை சமூகமாக முடிவுக்கு கொண்டுவர விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் 2 மாதங்களாகப் பல நடவடிக்கைகள் எடுத்தது. இந்தப் பகுதியைச் சார்ந்த மயிலம்,விக்கிரவாண்டி, விழுப்புரம எம்.எல்.ஏக்கள், விழுப்புரம் எம்பி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது . கோட்டாட்சியர் தலைமையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனாலும்கூட இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி விழுப்புரத்தில் 11 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மேல் பாதியில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் சட்டப்படி வழிபாட்டு சமத்துவம் நிலைநாட்டப் படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அதன் பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினரோ, தலித்துகள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது என கூறி தீக்குளிக்க முயன்றனர்.
இந்நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1) இன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர் முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து மேல்பாதி அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலின் வாயிலை இன்று காலை பூட்டி சீல் வைத்துள்ளார்.