கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் நாய்கறி விற்பனைக்கான மாநில அரசின் தடையை குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா (நாகாலாந்து) பெஞ்ச் அதிரடியாக நீக்கி உள்ளது. நாகாலாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாய்கறி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உறவினர்கள் வந்தால் ஆடு வெட்டு, கோழியை அறு என்பது நம்ம ஊர் வழக்கம். நாகாலாந்தில் ஆடு, மாடு கோழி இறைச்சியைவிட உயர்ந்ததாக கருதப்படுவது நாய்கறிதான். நாகாலாந்தின் உணவகங்கள் அனைத்திலுமே நாய்கறி பிரதானமாகவே இருந்து வந்தது. நாகாலாந்தில் ஆட்டு கறி விலையை விட நாய்கறி விலைதான் மிக அதிகம். பாம்பு, பல்லி, தவளை உள்ளிட்டவையும் நாகாலாந்து மக்களின் உணவு முறைகளில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒருகட்டத்தில் நாய்களின் இருப்பே கேள்விக்குறியானதால் அண்டை மாநிலங்களில் இருந்து நாய்களை இறைச்சிக்காக நாகாலாந்துக்கு கடத்தும் போக்கும் அதிகரித்தது. அண்டை மாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு நாய்களை கடத்துவதைத் தடுப்பதே போலீசாரின் பிரதான பணியாகவும் இருந்தது. அப்படி நாகாலாந்து மக்களின் வாழ்வின் ஒன்றிப் போனதாக நாய் கறி இருந்தது.
ஆனால் நாய்களை கொடூரமாக கொல்வதுதான் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். நாகாலாந்து மாநில அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து நாகாலாந்து மாநில அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நாய் கறி விற்பனைக்கே அதிரடியாக தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக நாகாலாந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். பின்னர் சட்டப் போராட்டத்தையும் நடத்தினர். இந்த நிலையில்தான் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா (நாகாலாந்து) கிளையானது நாய்கறி விற்பனைக்கான தடையை அதிரடியாக நீக்கி உள்ளது. இது நாகாலாந்து உள்ளூர் இனக்குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இனி நாகாலாந்து தலைநகர் கோஹிமா வீதிகளில் மீண்டும் களைகட்டப் போகிறது நாய் கறி விற்பனை! கோஹிமா உள்ளிட்ட நாகாலாந்து ஹோட்டல்களில் வெரைட்டியான நாய்கறி 24 மணிநேரமும் கிடைக்கும்!