மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையானது எரிபொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது மாற்றம் அடைகிறது. குறிப்பாக ஏறுமுகமாக செல்கிறது எனச் சொல்லலாம். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ஒவ்வொரு மாதமும் உயரும் நிலை காணப்படுகிறது. இந்த வரிசையில் அரிசியின் விலை இம்மாத தொடக்கத்தில் திடீரென உயர்ந்துள்ளது.
அரிசி விலை கிடுகிடு உயர்வுபொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து ரகங்களும் விலை உயர்ந்துள்ளன. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் சாமானியர்கள் தலையில் பெரும் சுமை ஏறி நிற்கிறது. இதன் பின்னணி குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் அரசின் நடவடிக்கைஅதுமட்டுமின்றி கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் அரசு, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது. இந்த தேவையை பூர்த்தி செய்ய அதிகப்படியான நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டியுள்ளது. இது பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நெல்லின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல.
தஞ்சை நெல்லின் பயன்பாடுஎனவே ஒரு கிலோவிற்கு குறைந்தது 2 ரூபாயை அதிகரித்து விட்டதாக தெரிவித்தனர். அப்படியெனில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள நெற்களஞ்சிய பகுதியில் விளைவிக்கப்படும் நெல் எங்கே செல்கிறது எனக் கேட்கலாம். இவற்றின் பெரும்பாலான பகுதி தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறது.
வெளிமாநில வரத்து குறைவுஇதனால் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பிற மாநிலங்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. அதில் கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். அவர்கள் திடீரென வரத்தை குறைத்ததால் தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இன்னும் எத்தனை மாதங்கள்?இந்த விலை ஏற்றத்தை எதுவரை சமாளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி விசாரிக்கையில் அடுத்த அறுவடைக் காலம் வரை இத்தகைய சூழல் தொடருமாம். அப்படியெனில் டிசம்பர் வரை அரிசி விலையேற்றம் தொடரும். அதன்பிறகு நெல் விளைச்சல், வெளிமாநில வரத்து ஆகியவற்றை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறுகின்றனர்.
தமிழக அரசுக்கு கோரிக்கைஇதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. பதுக்கல் நடவடிக்கையால் செயற்கையாக விலையேற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது. எனவே அரிசி விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை கண்காணித்து தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.