முதல்வரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்த கூடாது – ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதல்வர், அமைச்சர்களின் பயணங்களைக் கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது; அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக ஆளுநர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொண்டிருப்பது, அவரது பேச்சுகள் மூலம் தெரிகிறது. இதன் ஒருபகுதியாக, ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில், ஆளுநர் தன் அரசியலை பேசியுள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் கல்விச்சூழல் சரியில்லை; வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணங்கள், முதலீட்டாளர்களுடன் பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது என்று முதல்வரின் பயணத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசி, துணைவேந்தர் மாநாட்டை தனது அரசியல் மேடையாக ஆக்கியுள்ளார்.

ஏற்கெனவே சில பிரச்சினைகளில் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் எதிராக வந்துள்ளதால் அதை திசைதிருப்ப ஆளுநர் இம்மாதிரி செயல்படுகிறார்.

தமிழகத்தின் கல்வி வரலாற்றை அறியாமல் ஆளுநர் உள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது. உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப்பட்டியலில் 100 பல்கலைக்கழகங்களில் 22 தமிழகத்தைச் சேர்ந்தவை, 100 கல்லூரிகளில் 30 தமிழகத்தைச் சேர்ந்தவை. ஏற்கெனவே நிதி ஆயோக் வெளியிட்ட தரவரிசையிலும் தமிழக கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை 46.9 சதவீதம். 33.36 லட்சம்பேர் வந்துள்ளார்கள் என்றால் தமிழகத்தின் கல்விச்சூழல் நன்றாக இருப்பதுதான் காரணம். தரவரிசையின் பல்வேறு கூறுகளில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வி கட்டமைப்பில் தமிழகம் மிகச்சிறப்பாக உள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்த ராக ஆளுநர் இருந்து கொண்டு, உண்மைகளை மறைத்து பேசுவது ஏன் என்பது தெரியவில்லை.

அதேபோல், வெளிநாடுகளுக் குச் சென்று வந்தால் முதலீடுகள் வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2023 வரை ஓராண்டில் 108 நிறுவனங்கள், ரூ.1.81 லட்சம் கோடிக்கு முதலீடு செய்து, 1.94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2021-22-ல் தமிழகத்தில் 4.79 லட்சம் நிறுவனங்களில் 36.63 லட்சம் பேர் பணியாற்றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23-ல் 7.39 லட்சம் நிறுவனங்கள், 47.17 லட்சம் பணியாளர்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 4.94 லட்சம் பொறியியல், 10.34 லட்சம் கலை, அறிவியல் மாணவர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

ரோபோட்டிக் உள்ளிட்ட புதிய துறைகளில் திறன் பெற்றுள்ளனர். இதற்கான சான்றிதழ்களும் முன்னணி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன. 4-ம் ஆண்டு படித்த பொறியியல் மாணவர்கள் 1.15 லட்சம் பேரில் 61,900 பேர் தலைசிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை, கல்விச்சூழல் இப்படி உள்ளது என்று குறைகூறுவதையும், முதலீடுகளை உருவாக்குவதில் முதல்வர் அல்லது அமைச்சர்கள் பயணங்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதையும் ஏற்க முடியாது.

இந்த பயணங்களை தமிழக முதல்வர் மட்டும் மேற்கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சீனா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா நாடுகளுக்கு பயணித்து முதலீட்டாளர்களைச் சந்தித்து அழைத்துள்ளார். ஆளுநர் இந்த விஷயத்தில் பிரதமரே நோக்கி கேள்வி எழுப்பியுள்ளதாகவே நினைக்கிறேன்.

எனவே, பாஜக இதுகுறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக இப்பயணங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவற்றின் விளைவுகளைத்தான் நாம் பார்க்க வேண்டும். முதல்வரின் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கும் மேல் முதலீடுகள் வந்துள்ளன. பல உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

தொழில் முதலீடுகளுக்கு உகந்தமாநிலமாக தமிழகம் இருப்பதால்தான் முதலீட்டாளர்கள் வருகின்றனர். 2 ஆண்டுகளில் ரூ.2 லட்சம்கோடிக்கு அதிகமாக முதலீடுகள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சூழல் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்நிலையில், ஆளுநர் இவ்வாறான அரசியல்ரீதியான கருத்துகளை கூற ராஜ்பவனை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், ஆளுநரின் பேச்சுகுறித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சிவ.வீ.மெய்ய நாதன் கூறியதாவது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழக முதல்வரின் வெளிநாடு பயணத்தை இபிஎஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்தபோது, தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள், வளர்ச்சி மீது பெரிதளவில் கவலைப்படாதவர்கள், வளர்ச்சி குறித்து யோசிக்கவே தெரியாதவர்கள் சொல்லுகின்ற விமர்சனமாகத் தான் இது இருக்கிறது என்று கூறினேன். அந்த வகையில் இது எல்லோருக்குமே பொருந்தும்.

அமைச்சர் மெய்யநாதன்: தமிழக முதல்வர் மட்டும் வெளிநாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகச் செல்லவில்லை. கடந்த 9ஆண்டுகளாக பிரதமர் மோடியும் பல நாடுகளுக்கு முதலீடுகளை மீட்டெடுப்பதற்காக சென்று வந்திருக்கிறார். இதுதான் ஆளுநருக்கு நான் அளிக்கும் பதில். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.