வாஷிங்டன்: அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் இது தொடர்பாக உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “அமெரிக்காவுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்தோம். அது குறித்து கூர்ந்து நோக்கி வருகிறோம். அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அமெரிக்காவுக்கான விமானம் என்றால் நிச்சயமாக அமெரிக்கர்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏர் இந்தியாவில் இருந்து வெளியான அறிக்கை ஒன்று மாற்று விமானம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கின்றது. அடுத்தடுத்த நகர்வுகளைக் கவனித்து வருகிறோம்” என்றார்.
உக்ரைன் – ரஷ்யா போர் மேலும் வலுவடைந்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கப் பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், உக்ரைனை தூண்டிவிட்டு ஆயுதங்களை வழங்கி போரை மறைமுகமாக அமெரிக்கா நடத்துகிறது என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. அதனால் தங்கள் நாட்டு மக்களுடன் விமானம் ஒன்று ரஷ்யாவில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.