தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் நாள்தோறும் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகாவது தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்தனர் மக்கள். ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் தகித்த போதும் மாலை நேரங்களில் மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே மேக மூட்டமாக காணப்படுகிறது. சில இடங்களில் காலை நேரத்தில் சாரல் மழையும் பெய்தது. சென்னையில் இன்று வெப்பம் குறைந்து காணப்படுவதற்கான காரணத்தை தமிழ் நாடு வெதர்மேன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது காலை இடியுடன் கூடிய அதிக மேகங்கள் ஆந்திராவில் இருந்து வந்து கடலுக்குள் சென்றதாகவும் இந்த மேகக்கூட்டங்கள் வட தமிழகத்தின் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், பாண்டி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இன்று வெப்பநிலையை 40 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு வெதர்மேனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அப்படியானால் சென்னையில் இன்று நேற்றைய அளவுக்கு வெயில் இருக்காது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்றும் சென்னையில் நேற்று போல் மழை பெய்யுமா? என்றும் கேட்டு வருகின்றனர்.