ரயில் விபத்து தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக உலுக்கி எடுத்து வருகின்றன. இந்த லிஸ்டில் நேற்று இரவு மேலும் ஒரு ரயில் சேர்ந்து கொண்டது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அடுத்த ஷாபூரா பிடோனி பகுதியில் எல்.பி.ஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
ஜபல்பூர் சரக்கு ரயில்
இதுதொடர்பாக பேசிய மத்திய மேற்கு ரயில்வே துறை தலைமை செய்தி தொடர்பு அதிகாரி பேசுகையில், எல்.பி.ஜி ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டு விட்டன. இதனால் முதன்மை வழித்தடத்தில் செல்லும் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் உண்டாகவில்லை. பயணிகள் ரயில் சேவை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மீட்பு பணிகள் தீவிரம்
இன்று காலை முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிவித்தார். இந்த சரக்கு ரயில் விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசா ரயில் விபத்து
மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறிப்பாக பகனகா பஸார் ரயில் நிலையம் அருகே மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் வந்த பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை மோதி பயங்கர விபத்தில் சிக்கின. மேற்குறிப்பிட்ட இரண்டு பயணிகள் ரயிலில் இருந்து 17 பெட்டிகள் தடம் புரண்டு கடும் சேதத்திற்கு ஆளாகின.
என்ன காரணம்?
இதில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாநில அரசு உறுதிப்படுத்தியது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக விசாரித்து உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு ”சிக்னலிங் இன்டர்பெரன்ஸ்” தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது விபத்து
இதையடுத்து 5ஆம் தேதி ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பட்டியலில் தான் ஜபல்பூர் சரக்கு ரயில் விபத்தும் சேர்ந்து கொண்டது. அதுவும் வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் நாள்தோறும் பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.