கீவ்: உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.
சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை ரஷ்ய ராணுவம் தகர்த்துவிட்டதாகவும், இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் 5 மணி நேரத்துக்குள் அபாய அளவை எட்டும் என கெர்சன் பகுதி ராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் புரோகுதின் கூறியுள்ளார்.
இதனால் தெற்கு உக்ரைனின் கக்கோவ்கா பகுதியில் உள்ள 10 கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளனர்.
அணையை யார் தாக்கியது என்ற தகவல் உறுதியாகவில்லை… இந்த விவகாரத்தில் ரஷ்யா – உக்ரைன் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் பேசும்போது, “ஆயிரக் கணக்கானோர் இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இப்பகுதியில் நீர்மட்டம் மேலும் உயரும் அபாயம் உள்ளது. மக்கள் தங்களது உடைமைகளை முற்றிலும் இழந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.