சின்னத் தாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான வண்ணப்பூக்கள் படத்தில் ஹீரோவாக தேர்வான விக்னேஷ் 7 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகுதான் சின்னத்தாய் படத்தில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அதனை அம்மா பொண்ணு, கிழக்கு சீமையிலே, உழவன், செல்லக்கண்ணு, பசும்பொண், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாலாவும் நடிகர் விக்னேஷும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையிலான நெருக்கம் அதிகம். பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் முதலில் விக்னேஷ்தான் நடிக்க இருந்தது. ஆனால் விக்னேஷ் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
கடைசயாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்தார் விக்னேஷ். தொடர்நது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்னேஷின் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு தனது உதவிக்கு வந்த உதவியாளரிடம் மிரட்டல் தொனியில் ஆபாசமாகவும் சாதி வெறியோடும் போனில் பேசியுள்ளார் நடிகர் விக்னேஷ்.
அந்த போன் உரையாடலில் பேசும் உதவியாளர், படப்பிடிப்பு தளத்தில் உதவியாளருக்கு நடிகர்தான் சம்பளம் தர வேண்டும் என்று கூறுகிறார். இதனைக் கேட்ட நடிகர் விக்னேஷ் ஏற்கனவே 100 ரூபாய் கொடுத்துவிட்டேன், இன்னும் 250 ரூபாய் வந்து வாங்கிச் செல் என்கிறார். அதற்கு அந்த உதவியார் 600 ரூபாய் கொடுக்க வேண்டும், அரை நாள் என்றாலும் ஒரு நாள் என்றாலும் ஒரே சம்பளம்தான் என்கிறார்.
ஆனால் அப்படி கொடுக்க முடியாது என விவாதம் செய்யும் நடிகர் விக்னேஷ் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாகவும் சாதி வெறியோடும் பேசுகிறார். நடிகர் விக்னேஷின் இந்த ஆடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னி அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் விக்னேஷ்.
பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள்.
தமிழ்நாடு காவல்துறை இவர்மீது
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
@tnpoliceoffl என்ற தமிழ்நாடு காவல்துறையின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டுள்ளார் வன்னி அரசு. நடிகர் விக்னேஷின் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்களும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.